விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பதிரனவின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு அதி சொகுசு வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேன்ட்ரோவர் டிபென்டர் ரக வாகனமொன்று தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என தெரிவித்துள்ளது.
வாகனமொன்று இறக்குமதி செய்யப்பட்டமை குறித்த ஆவணங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
வாகனமொன்று இறக்குமதி செய்யப்பட்டது உண்மை என்ற போதிலும் அது விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கானது அல்ல என விமானப்படையினர் அறிவித்துள்ளார்.
ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கைப் படையினருக்காக இந்த வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உரிய விதிமுறைகளை பின்பற்றியே வாகனம் இறக்குமதி செய்யப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துசான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
விமானப்படைக்கு கொள்வனவு செய்யப்படும் அனைத்து வாகனங்களும் விமானப்படைத் தளபதியின் பெயரில் கொள்வனவு செய்யப்படும் எனவும் இது வழமையான நடைமுறை எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், அவை விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கானது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாகன இறக்குமதிக்கான பணத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு அமெரிக்க டொலர்களில் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.