பாம்பாற்றின் குறுக்கே மீண்டும் அணை கட்டும் பணியை தொடங்கிய கேரளா

உடுமலை:

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதுபோக கரூர் வரையில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரமாக பாம்பாறு உள்ளது. கேரளாவில் உற்பத்தியாகி மூணாறு, மறையூர் வழியாக தூவானம் அருவியை கடந்து மழை காலங்களில் அமராவதி அணைக்கு வந்தடையும்.

அமராவதி அணையானது மேற்கு தொடர்ச்சி மலைகளில் பொழியும் தென்மேற்கு பருவமழையின் மூலமே அதிக நீரை பெறுகிறது. இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் மாதத்தில் அமராவதி அணையானது ஜூலை இறுதிக்குள்ளாகவே முழு கொள்ளளவை எட்டிவிடும்.

கரூர், திருப்பூர் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கென ஆண்டுக்கு 12 டி.,எம்.சி. தேவைப்படுகிறது. அமராவதி அணைக்கு ஆண்டு முழுவதும் சுமார் 7 டி.எம்.சி. தண்ணீரே வந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் 5 டி.எம்.சி., தண்ணீர் பற்றாக்குறை நிலையே இருந்து வருகிறது.

பெரும்பாலான ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பருவமழை கை கொடுப்பதில்லை. இந்நிலையில் பாம்பாற்றின் குறுக்கே பட்டிச்சேரி என்ற இடத்தில் அணை கட்ட கடந்த 2011-16ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கியது.

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் மீண்டும் 2017-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இதன் மூலம் அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் பாம்பாற்றின் மீது 75 அடி உயரத்திலும், 440 அடி அகலத்திலும் அணையின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அணையின் மூலம் சுமார் 2 டி.எம்.சி., நீரை தேக்கவும் கேரள அரசு திட்டமிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட போராட்டங்களை தொடர்ந்து பணிகள் மீண்டும் நிறுத்தப்பட்டது.

தற்போது கடந்த சில வாரங்களாக அணையின் கட்டுமான பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அணை கட்டப்பட உள்ள சிறிய அளவிலான தடுப்பணை அமைந்திருந்த பகுதியில் ஏற்கனவே சுமார் 45 அடி ஆழத்துக்கு மலைப்பகுதியில் அணை கட்ட தோண்டப்பட்டிருந்த பகுதியில் கற்கள், ஜல்லி,எம்சேண்ட் ஆகியவற்றை மலைபோல் குவித்து வைத்து இரவு, பகலாக போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அமராவதி பாசன விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமராவதி அணைக்கு ஆண்டுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக 12 டி.எம்.சி. வரை தண்ணீர் தேவைப்படும் நிலையில், மொத்தமாக அமராவதியின் நீராதாரத்தை பறிக்கும் வகையில் கேரள அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கையால் அமராவதி பாசனம் பாலைவனமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் தீர்ப்பாய தீர்ப்பின்படி எந்த ஒரு நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டால், அந்த நீர் பாசன வடிநில பகுதியை கொண்டுள்ள அமராவதி அணை அமைந்துள்ள தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும் . ஆனால் கேரள அரசு எதையும் பொருட்படுத்தாமல் எந்தவித அனுமதியும் பெறாமலேயே அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரத்தை பறிக்கும் வகையில் தடுப்பணையை மீண்டும் கட்டி வருகிறது.

அமராவதி அணையை நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் முயற்சியாக இது மாறியுள்ளது. இதனால் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், குடிநீரை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களும் பாலைவனமாகி விடும். இதுபோக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பியுள்ள சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விடும்.

ஏற்கனவே காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு அநீதி இழைத்து மற்றொரு அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை போல, கேரளாவும் கர்நாடகா பாணியை பின்பற்றி அமராவதி பாசனத்தை சீர்குலைக்க முயற்சிப்பதை ஆரம்பத்திலேயே தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்…
ஒட்டன்சத்திரம் அருகே 2 கிராமங்களில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு- பொதுமக்கள் அச்சம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.