புதுடெல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நேற்று இந்தியா வந்தார். மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை இன்று அவர் சந்தித்துப் பேசுகிறார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெற்காசிய நாடுகளில்சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக நேற்றுஇரவு அவர் டெல்லி வந்தடைந்தார். இன்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, இருதரப்பு உறவுகள் லடாக்கில் இரு நாடுகளின் படைகள் குறைப்பு ஆகியவை குறித்து இருவரும் ஆலோசிப்பார்கள் என்று தெரிகிறது. குறிப்பாக, லடாக் எல்லை பிரச்சினை மற்றும்காஷ்மீர் குறித்து வாங் யீ தெரிவித்த கருத்து குறித்தும் அமைச்சர் ஜெய்சங்கர் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
2020-ம் ஆண்டு லடாக்கில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியதை இந்தியவீரர்கள் முறியடித்தனர். இதையடுத்து, பதற்றமான சூழலில் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்தன. ராணுவ மற்றும்தூதரக அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஓரளவு படைகள் குறைக்கப்பட்டன.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்துள்ளார். மேலும், பாகிஸ்தானில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய வாங் யீ, காஷ்மீர் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இது தேவையற்றது என்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறை பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.