சென்னை: சைக்கிளில் 9 கி.மீ தூரம் ரோந்து சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி – அதிகாலையில் ஆடிப்போன போலீஸார்

வடசென்னை இணை கமிஷனரான ஐபிஎஸ் அதிகாரி ரம்யாபாரதி், இரவு நேர ரோந்து பணியில் போலீஸார் என்ன செய்கிறார்கள், என்பதை தெரிந்து கொள்ள திட்டமிட்டார். போலீஸ் வாகனத்தில் சென்றால் இரவு பணி போலீஸார் அலார்ட்டாக வாய்ப்புள்ளது எனக்கருதிய அவர், சைக்கிளில் ரோந்துப் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அதோடு, சைரன் வைத்த போலீஸ் வாகனத்தில் சென்றால் இரவு நேர சென்னை எப்படியிருக்கிறது என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியாது என்று கருதிய இணை கமிஷனர் ரம்யாபாரதி, சைக்கிளில் ரோந்து பணியைத் இன்று அதிகாலை 2.45 மணியளவில் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து தொடங்கினார்.

சைக்கிளுடன் இணை கமிஷனர் ரம்யா பாரதி

அப்போது போலீஸ் சீருடையில் இல்லாமல் மப்டியில் (சாதாரண உடை) சென்ற அவர் தன்னுடைய சைக்கிளுக்கு முன் சிறிது தூரத்தில் உளவுத்துறை சப்-இன்ஸ்பெக்டரை செல்லும்படி தெரிவித்தார். அதைப்போல தனக்குப் பின்னால் பாதுகாவலர்களையும் வரும்படியும் கூறினார். தனியாக அதிகாலை நேரத்தில் சென்ற அவர், தலையில் ஹெல்மெட்டையும் அணிந்திருந்தார். கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலாஜாபாத், முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை வழியாக சைக்கிளில் சென்ற ரம்யாபாரதி அடுத்து எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியாக ஆர்ஏ மன்றம் சந்திப்பு, எஸ்பிளனேடு சாலை, குறளகம் சந்திப்பு ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அந்தப்பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியிலிருந்த போலீஸாரிடம் பாதுகாப்பு பணி விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு வழியாக சென்ற இணை கமிஷனர் ரம்யா பாரதி, யானைக் கவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாசக்தி பாயின்ட், மின்ட் தெரு, அம்மன் கோயில் தெரு, வாலாஜா சாலை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியாக மூலக்கொத்தளம் சந்திப்பு, சிபி ரோடு, ஸ்டான்லி நகர் சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மீனாம்பாள் நகர் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டவர், திடீரென ஆர்.கே.நகர் காவல் நிலையத்துக்குள் சென்றார்.

ரம்யாபாரதி

அப்போது போலீஸார், காவல் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா, அல்லது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ரம்யாபாரதி நேரிடையாகவே கண்காணித்தார். இதையடுத்து , வைத்தியநாதன் பாலம், புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான இளையமுதலி தெருவிலும் தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட கைலாசம் தெரு, சென்னியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களுக்கு சைக்கிளில் சென்றார். அடுத்து , தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை 4 மணியோடு ரோந்துப் பணியை முடித்துக் கொண்ட இணை கமிஷனர் ரம்யா பாரதி, 9 கி.மீட்டர் தூரம் சைக்கிளிலேயே வடசென்னையில் வலம் வந்துள்ளார். அவர் சென்ற இடங்களில் சிலர் குடிபோதையில் தள்ளாடியபடி சென்றனர். இந்த அதிரடி அதிகாலை சைக்கிள் ரோந்து பணியால் வடசென்னை போலீஸார் ஆடிப்போய்விட்டனர்.

இதுகுறித்து இணை கமிஷனர் ரம்யா பாரதியிடம் பேசினோம். “அதிகாலை 2.45 மணிக்கு தொடங்கிய சைக்கிள் ரோந்துப் பணி அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தது. சைக்கிளில் சென்றதால் எளிதில் எல்லாவற்றையும் கண்காணிக்க முடிந்தது. நான் சென்ற இடங்களில் போலீஸார் விழிப்புடன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரண்டு பேரைப் பிடித்து விசாரிக்க உத்தரவிட்டேன். இந்த ரோந்து பணி மூலம் இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்கள் குறையும். இந்த ரோந்துப் பணி அடிக்கடி நடக்கும்” என்றார்.

ரம்யா பாரதி

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுதான் வார நாள்களில் சைக்கிளில் இதைப் போன்று சென்று காவல் நிலையங்களை ஆய்வு செய்வார். அதே ஸ்டைலில் இளம் போலீஸ் அதிகாரி ரம்யா பாரதியும் அதிகாலை நேரத்தில் சைக்கிள் ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.