சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டினியால் பாதிப்பு: 40 ஆண்டுகளில் இல்லாத கடும் பஞ்சத்தால் மக்கள் அவதி

“என்னிடம் காரோ, கழுதை சவாரிக்கான பணமோ இல்லை. ஆனால், வறட்சியிலிருந்து தப்பித்து 200 கி.மீ. தொலைவில் உள்ள பையோடாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. எனது குடும்பத்தினருடன் 15 நாட்கள் நடந்தே அங்கு சென்றேன். இந்த பயணத்தில் எனது 3 வயது குழந்தையும், எனது மனைவியும் தாகத்தால் உயிரிழந்தனர்” என்கிறார் 47 வயதான அலி அதான்.

சோமாலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக அலி அதானின் கால் நடைகள் எல்லாம் உயிரிழக்க, அலி உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் வேறு இடத்திற்குச் சென்றனர். அப்போதுதான் தனது மனைவி மற்று குழந்தையை அலி இழந்திருக்கிறார். அலி மட்டுமல்ல 7 வருடங்களுக்கு முன்னர் கணவரை இழந்த 10 குழந்தைகளின் தாயான, முமினோ மவ்லிம்மும் பல போராட்டங்களுக்கு இடையே பையோடாவுக்கு வந்திருக்கிறார்.

40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியால் சோமாலியாவில் லட்சத்துக்கு அதிகமான மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 4.3 மில்லியன் மக்கள் உணவு, தண்ணீர், இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர்.

உக்ரைன், இலங்கையில் நிலவும் நெருக்கடிகளைப் பேசும் அதே வேளையில் சோமாலியா பற்றி பேசுவதும் முக்கியத்துவமானது.

ஆப்பரிக்க கண்டத்தின் கொம்பு பகுதியில் அமைந்துள்ள சோமாலியாவில், நிலையான அரசு அமையாதது, தொடர்ந்து நடந்து வரும் உள்நாட்டு சண்டைகள், மழையின்மை ஆகியவை கடும் வறட்சிக்கு காரணமாகியுள்ளன. இதில் தெற்கு சோமாலியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தான் கடும் வறட்சிக்கு எதிராக சோமாலியா அரசு அவசர நிலையை அறிவித்தது. எனினும் 5 மாதங்கள் கடந்தும் சோமாலியாவில் நிலைமை சீராகவில்லை.

கடந்த சில வருடங்களில் மட்டும் சோமாலியாவில் இரண்டரை லட்சம் பேர் பட்டினியால் மடிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கவும் வாய்ப்புண்டு..

சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டிணியால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. சோமாலியாவின் தென் பகுதியில், தண்ணீர் இல்லாததால் ஆடு, ஒட்டகங்கள், செம்மறி ஆடுகள், மாடுகள் மற்றும் கழுதைகள் இறந்து குப்பைகளாக காட்சியளிக்கின்றன. பல ஏரிகளில் தண்ணீர் வறண்டுவிட்டதால் முதலை உள்ளிட்ட நீர்வாழ் விலங்குகளும் உயிரிழந்து வருகின்றன.

அல் ஷபாப்! சோமாலிய அரசுக்கு எதிராக அல்கொய்தாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர் அந்நாட்டில் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் சமீபகாலமாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்துக்கின்றன.

இதனால் பெரும்பாலான இடங்களில் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவுகிறது. இதன் காரணமாகவும் சோமாலியாவின் பொருளாதாரம் சரிந்துள்ளது.

நிதி பற்றாக்குறை சோமாலியாவில் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த முகமத் கூறும்போது, “ ஐந்து வருடங்களுக்கு முன்னர் சர்வதேச சமூகத்திலிருந்து போதுமான உதவிகள் கிடைத்தன. ஆனால் தற்போது அப்படி இல்லை. உதவிக்கு தேவையான நன்கொடைகள் போதுமானதாக கிடைக்கவில்லை” என்கிறார்.

கரோனா தாக்கம், பொருளாதார இறக்கம், உக்ரைன் போர் இவற்றின் காரணமாகவும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறான சூழலில்,சோமாலியாவுக்கு உடனடி தேவையாக சர்வதேச அமைப்புகளிடமிருந்து வரும் நிதிகள் தாமதமின்றி வந்தடைய வேண்டும். அது ஒன்றே கடும் பட்டினியில் சிக்கியுள்ள சோமாலிய மக்களையும், ஊட்டசத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் குழந்தைகளையும் பாதுகாக்கும் ஒரே வழி. விரைவில் அதற்கான பாதை உருவாகும் என்று நம்புவோம்.

தகவல் உறுதுணை: வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, அல் ஜஸீரா

தமிழில்: இந்து குணசேகர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.