நேட்டோ
நாடுகளிடம் ஆயிரக்கணக்கான பீரங்கிகள் உள்ளன, போர் விமானங்கள் உள்ளன. எங்களது நாட்டைக் காப்பாற்ற அதிலிருந்து கொஞ்சம் கொடுங்க என்றுதான் கேட்டோம்.. ஒன்றைக் கூட அவர்கள் தரவில்லை என்று
உக்ரைன் அதிபர்
விலாடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர்
ஒரு மாதத்தைத் தாண்டி விட்டது. ரஷ்யாவும் போரை நிறுத்தியபாடில்லை. உக்ரைனும் தனது போராட்டத்தை விட்ட பாடில்லை. இருவருமே முட்டி மோதிக் கொண்டுள்ளனர்.
உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் ரஷ்யாவைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ரஷ்யா போரை நிறுத்துவதாக தெரியவில்லை. மாறாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அணு ஆயுதத்தை வேறு அது பயன்படுத்தப் போவதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
ரஷ்யாவிடம் இருப்பது “அப்பளம்” அல்ல.. அதி பயங்கர அணு ஆயுதங்கள்.. மிரளும் அமெரிக்கா!
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் உக்ரைன் நாட்டின் பரிதாப நிலையை அவர் தெளிவாக விவரித்துள்ளார். நேட்டோ நாடுகள் தனது நாட்டைக் காக்கும் போரில் தங்களுக்கு உதவவில்லை என்றும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு ராணுவ உதவி தேவை. கட்டுப்பாடில்லாத உதவிகள் தேவை. எங்களைத் தாக்குவதில் ரஷ்யா எந்தக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கவில்லை. நாங்கள் மட்டும் எப்படி கட்டுப்பாடு காக்க முடியும். ஆயுதங்கள் தேவை, மருந்துகள் தேவை, உணவு பொருட்கள் தேவை, குளிர்சாதனப் பெட்டிகள் தேவை.. எல்லா உதவிகளும் தேவை. தண்ணீர் இல்லை, உணவு இல்லை, செயற்கையான பஞ்சம் உருவாகியுள்ளது.
நாங்கள் நேட்டோவிடம் உதவிகள் கேட்டோம். அவர்களிடம் போர் விமானங்கள் கேட்டோம். ஆயிரக்கணக்கான விமானங்கள் அவர்களிடம் உள்ளன. அதிலிருந்து ஒன்றைக் கூட அவர்கள் தரவில்லை. 20,000க்கும் மேற்பட்ட பீரங்கிகள் உள்ளன. அதில் ஒரு சதவீதம் மட்டுமே கொடுக்குமாறு கேட்டோம். அதையும் தரவில்லை. எங்களது நாட்டை நாங்கள் காக்க வேண்டும். நாங்கள் வாழ வேண்டும். அதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. உயிர் வாழ்வது ஒவ்வொருவரின் உரிமையாகும்.
ஆயுதங்களை அளவில்லாமல் அள்ளிக் கொடுங்க.. நேட்டோவுக்கு உக்ரைன் கோரிக்கை
இந்தப் போரை நாங்கள் விரும்பவில்லை. இது எங்கள் மீது திணிக்கப்பட்ட போராகும். எங்களது மக்களைக் காப்பாற்ற எங்களுக்கு உதவுங்கள் என்று கோரியுள்ளார் ஜெலன்ஸ்கி.
உண்மையில் உக்ரைனுக்கு உதவ நேட்டோ அமைப்பு தயங்குகிறது. அமெரிக்காவும் பதுங்குகிறது. காரணம், ரஷ்யாவின் கோபம் உக்கிரத்தில் இருப்பதால். உக்ரைனுக்கு உதவப் போய் தங்கள் மீது ரஷ்யா பாய்ந்து விட்டால் அது மிகப் பெரிய போராக மாறி விடும். அதனால் தேவையில்லாத இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் எந்த நாடும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு பகிரங்கமாக உதவ மறுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.