சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச சட்டசபை பொதுத் தேர்தலில் எம்.எல்.ஏ.வாகத் தேர்வானார் சமாஜ்வாதி கட்சி தலைவர்
அகிலேஷ் யாதவ்
. இதைத் தொடர்ந்து மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கவே, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார் உ.பி.யில் 2027 சட்டசபைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள அகிலேஷ் முடிவு செய்துள்ளார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபோல ஏதோ ஒரு அரசியல் காரணங்களுக்காகப் பதவியைத் துறப்பது… இல்லையில்லை மாற்றிக்கொள்வது தொடர்ந்து நடக்கிறது.
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுபோல பல உதாரணங்களைக் காண்பிக்க முடியும்.
யோசித்துப் பாருங்கள். ஏற்கெனவே மக்கள் வாக்களித்து ஒரு பொறுப்பில் இருக்கிறார். பிறகு இன்னொரு தேர்தலில் போட்டியிட்டு வென்று, பழைய பொறுப்பைத் துறக்கிறார். இதனால், அவருக்கு ஏற்கெனவே வாக்களித்த மக்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள். ஐந்து வருடங்கள் நமக்குப் பணி செய்வார் என்று கருதித்தானே பெருவாரியான மக்கள் வாக்களித்திருப்பார்கள். இப்படி ராஜினாமா செய்வது என்பது அந்த மக்களை முட்டாளாக்குவது இல்லையா? தவிர இவர்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். இதனால் அரசுக்குச் செலவு.
அது மட்டுமா… தேர்தலுக்குப் பல நாட்களுக்கு முன்பே, அரசு அலுவலர்கள் அது குறித்தான பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். காவல் துறையினருக்கும் கூடுதல் பணி. தவிர தேர்தல் அன்று விடுமுறை.
ஒரு நபரின் அரசியல் சூதாட்டத்தால் எத்தனை மனித உழைப்பு வீண்!
இதே போலத்தான் ஒருவரே இரு தொகுதிகளில் போட்டியிடுவதும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸின் ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் விதிவிலக்கல்ல. கடந்த காலங்களில் இந்திரா காந்தி, எல்.கே. அத்வானி போன்றோரும் இப்படிச் செய்திருக்கிறார்கள்.
இரு தொகுதியிலும் போட்டி என்றால் அந்த இரு தொகுதி மக்களையும் இந்தத் தலைவர்கள் நம்பவில்லை என்றுதானே அர்த்தம்! இரண்டிலும் வென்றால் ஒரு தொகுதியில் ராஜினாமா! மீண்டும் தேர்தல், அரசுக்குச் செலவு, மனித உழைப்பு வீண், மக்களுக்குத் திண்டாட்டம்!
இதில் இன்னொரு முரண் இருக்கிறது. எம்.எல்.ஏ.வாக இல்லாத ஒருவரைக் கட்சி முதலமைச்சராக்கும். ஆறு மாதங்களுக்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பது சட்டம். இவருக்காக, ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்வார். அங்கே ‘முதலமைச்சர் போட்டியிட்டு வெல்வார். அதாவது மீண்டும் அந்தத் தொகுதியில் தேர்தல்.
நமது தேர்தல் முறையில் இன்னும் சில நகை முரண்கள் உண்டு. ஒரு தொகுதில், நூறு வாக்குகள் இருக்கின்றன, இருவர் மட்டுமே போட்டி என வைத்துக்கொள்வோம். 51 வாக்குகள் பெற்றவர் வெற்றி. 49 வாங்கியவர் தோல்வி. இதுதானே ஜனநாயகம் என்போம். ஆனால் தோல்வி அடைந்தருக்கு வாக்களித்த 49 சதவகித மக்களின் உணர்வுகள் குப்பைக்கூடைக்குத்தானே செல்கின்றன!
இதற்காகத்தான் சில நாடுகளில் விகிதாச்சார முறை வைத்திருக்கிறார்கள். அதாவது கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் மக்கள் சபையில் இடம் ஒதுக்குவார்கள்.
நமது தேர்தல் முறையின் இன்னொரு காமெடியைப் பாருங்கள். ஒரு தொகுதியில் லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஒரே ஒரு வாக்காளர்தான் ஓட்டுப்போடுகிறார்.
அந்த ஒரு வாக்கைப் பெற்றவரை வெற்றிபெற்றவர் என தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மீதம் 99,999 பேர் ஏன் வாக்களிக்க வில்லை என்ற கேள்வி இரண்டாம்பட்சம்தான். அந்த ஒரு வாக்கைப் பெற்றவர் ‘மக்கள் பிரதிநிதியாக’ நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ செயல்பட சட்டப்படி எந்தவித தடையும் இல்லை!
இப்படி நடக்குமா என்ற கேள்வி சிலருக்கு வரலாம். ஜம்மு – காஷ்மீர் ஒரே மாநிலமாக இருந்தபோது இப்படி நடந்திருக்கிறது. குறிப்பாக எண்பதுகளில் அங்கு நடந்த தேர்தல்களில் பத்து பதினைந்து சதவிகிதமே வாக்குப்பதிவானது உண்டு. அதையும் ராணுவத்தினரே பதிந்தனர் என செய்தி வெளியிட்ட பத்திரிகைகளும் உண்டு.
இதுபோல இந்தியத் தேர்தல் முறை பற்றி எத்தனையோ சொல்லலாம்.
எந்தவொரு அரசியல் காரணங்களுக்காகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்யக் கூடாது, இரு தொகுதிகளில் போட்டியிடக் கூடாது, குறி்பிட்ட சதவிகித மக்கள் வாக்களிக்காவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும், தோல்வி அடைந்தவர்களின் வாக்குகளுக்கும் (அந்த மக்களின் உணர்வுகளுக்கும்) மதிப்பு அளிக்கப்பட வேண்டும்.
இனியாவது இப்படிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை.