சென்னை:
புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும் அலுவலர்களின் செயல்திறன் குறித்தும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்படவேண்டும் எனவும், மாவட்ட மற்றும் மண்டல பறக்கும்படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் எனவும், சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் அப்பகுதிகளை களஆய்வு மேற்கொண்டு, தேவைப்படின், ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனடியாக பொது ஏலத்திற்கு கொண்டுவந்து, அரசுக்கு மேலும் வருவாய் சேர்க்கவும், மாவட்ட கனிம கட்டமைப்பு விதிகள் 2017-ன் கீழ் மாவட்ட கனிம கட்டமைப்பு நிதியினைக்கொண்டு மக்கள் நல திட்டங்களை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்கள்.
இந்நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில் கனிம வருவாய் ரூ.1024 கோடி ஈட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இனி வரும் மாதங்களில் அதிக வருவாயினை ஈட்டிட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்கள். மேலும், கனிம வருவாய் விபரங்களை மாவட்ட வாரியாக கேட்டறிந்த அமைச்சர், கனிம வருவாயை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் குறித்த அறிவுரை வழங்கினார்.
மேலும் அனைத்து மாவட்டங்களில் உள்ள தகுதி வாய்ந்த கல்குவாரிகளை உரிய ஏலத்திற்கு கொண்டு வந்து கனிம வருவாயினை ஈட்டவும் பொது மக்களுக்கு கட்டுமான பொருட்களை நியமான விலையில் கிடைக்க வழிவகை செய்ய முனைப்புடன் செயல்படுமாறு அனைத்து மாவட்ட அலுவலர்களையும் கேட்டுக்கொண்டார்.
வாகனம் கைப்பற்றுகையை ஆய்வு செய்த அமைச்சர், அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்த பட்சம் மாதத்திற்கு 20 வாகனங்கள் கைப்பற்றிடவும், அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லும் மணல் வாகனங்களை முற்றிலும் தடுக்க மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார். மேலும் மண்டல பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு அதிக அளவில் வாகனங்களை கைப்பற்றி கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டி தருமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் இல. நிர்மல் ராஜ், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுதிப் ஜெயின், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன மேலாண்மை இயக்குநர் சி. கதிரவன் மற்றும் துறையின் உயர் அலுவலர்கள், அனைத்து மாவட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.