சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தைக் குறித்து யாமி கௌதம் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
“பெரும்பாலான மக்களின் சென்டிமென்ட் பக்கம் நான் நிற்க விரும்புகிறேன். எதை நான் கேட்டேனோ, எதை நம்புகிறேனோ அதன் பக்கம். (இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும்) உணர்ச்சியின் வலி, விவாதங்கள், சார்புகள் இவற்றுக்கு அப்பாற்பட்டவை.”
யாமி கௌதம் கணவர் இயக்குநர் ஆதித்யா தர், காஷ்மீரி பண்டிட் வகுப்பைச் சேர்ந்தவர். இந்நிலையில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார் யாமி.
“இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதை வெறும் வெற்றியையோ வசூலையோ வைத்துச் சொல்லவில்லை. இந்தப் படத்தோடு மக்கள் எப்படித் தங்களை இணைத்து பார்க்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்பதை இதற்கு முன் நாம் பார்த்ததில்லை. ஏனென்றால் இது பேசப்படாத ஒரு கதை. எல்லாவற்றையும் விட இதைப் பார்த்த மக்கள் தாங்கள் நினைத்ததைச் சொல்லும் வண்ணம் சுதந்திரம் பெற்றதாக உணர்கிறார்கள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இந்தப் படம் அமைந்திருக்கிறது” என காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஆதரவாக யாமியின் இந்தப் பதில் அமைகிறது.
முன்பு தான் படித்தும் கேட்டும் தெரிந்ததைப் பற்றித் திருமணத்திற்கு பிறகு கணவர் வழியாகவும் அவரது குடும்பத்தார் வழியாகவும் அறிய நேர்ந்தது என்கிறார். “வலி மிகுந்தது, நீண்ட நாள்களாகச் சொல்லப்படாமல் இருந்ததை இந்தப் படம் பேசியுள்ளது. இதைப் பிரசாரப் படம் எனச் சொல்லி நிராகரிப்பது கூடுதல் வலியைத் தருகிறது” என்கிறார்.
யாமி சமீபத்தில் ‘A Thursday’ என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்து அபிஷேக் உடன் இவர் நடித்திருக்கும் ‘Dasvi’ வெளியாக உள்ளது. இவை தவிர, OMG 2, Lost, பெயரிடப்படாத இரண்டு படங்கள் என பிஸியாக இருப்பவர் இன்னும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தைப் பார்க்கவில்லை என்கிறார்.
“கிடைக்கிற நேரத்தில் தியேட்டர் சென்று பார்த்துவிட்டு வருகிற படம் அல்ல இது. தியேட்டர்களில் இருந்து இந்தப் படம் எங்கும் போய் விடாது. அதற்கென ஒரு நாளில் சென்று பார்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வந்தவர்களின் உணர்ச்சியைக் கண்ட பிறகு, எளிதாகச் சென்று பார்க்கக்கூடிய படமாக இது இருக்காது என்றே நினைக்கிறேன்” என்றார்.