புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக்கொண்டார். இவரது அமைச்சரவையின் 52 உறுப்பினர்களில் வெறும் ஐந்து பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 273 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் பின்னணியில் அக்கட்சிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் வாக்களித்ததும் ஒரு காரணம். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் அனைத்து கட்சிகளும் சேர்த்து பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 42 என்றிருந்தது. இந்தமுறை அது 46 ஆக உயர்ந்துள்ளது. இதில், பாஜக 30, அக்கட்சியின் கூட்டணியான அப்னா தளம் (சேனுலால்) 3, சமாஜ்வாதி 12 மற்றும் காங்கிரஸில் ஒருவரும் வெற்றிப்பெற்றுள்ளனர்.
இதனால், இரண்டாம் முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக அமைச்சரவையில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, துணை முதல்வர் வாய்ப்பு பெண் ஒருவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தமுறை, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவளித்த தலித் பெண்கள், பாஜகவிற்கு அதிகமாக வாக்களித்ததாகவும் கருதப்பட்டது. இதன் காரணமாக, அந்த சமூகத்தை சேர்ந்த ஆக்ராவின் முன்னாள் மேயரான பேபி ராணி மவுரியாவிற்கு துணை முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும் எனப் பேசப்பட்டது.
உத்தராகண்டின் ஆளுநராக இருந்த பேபி, தனது பதவிக்காலம் முடியும் முன்பாகவே அந்தப் பதவியை ராஜினாமா செய்திருந்தார். பிறகு உ.பி.யின் ஆக்ராவிலுள்ள ஊரகத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால், இவருக்கு கேபினேட் அமைச்சராகும் வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ளது. மாயாவதியின் சமூகமான ஜாத்தவ் பிரிவை சேர்ந்தவர் இவர், பாஜகவில் 1990 ல் இணைந்தார்.
சம்பல் தனித்தொகுதியில் வென்ற தலித் பெண்ணான குலாபி தேவி, உத்தரப் பிரதேச மாநில இணை அமைச்சராக்கப்பட்டு உள்ளார். இவர் இதற்கு முன்பும் முதல்வர் யோகி அமைச்சரவயில் உறுப்பினராக இருந்தவர்.
மேலும், மூன்று பெண்களுக்கு பாஜக ஆட்சியில் இணை அமைச்சர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவராக, கான்பூர் மாவட்டத்தின் அக்பர்பூர்-ராணியா தொகுதியில் வென்ற பிரதீபா சுக்லா இடம் பெற்றுள்ளார். கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக வென்ற பாஜக எம்எல்ஏ இந்த சுக்லா. ரூ.4.46 கோடி சொத்திற்கு அதிபதியான 61 வயது பிரதீபா சுக்லா, பாஜகவில் பெண்களை இணைக்க முக்கிய பங்கு வகித்தவர்.
ஹர்தோய் மாவட்டத்தின் சஹபாபாத் தொகுதியில் இரண்டாவது முறையாக வென்றுள்ள ரஜினி திவாரியும் இணை அமைச்சராகிவிட்டார். 47 வயதான ரஜினி, இந்தமுறை முஸ்லீம் ஆதிக்கம் கொண்டதில், சமாஜ்வாதியின் முகம்மது ஆசிப்பை தோல்வியுறச் செய்தவர்.
கடந்த 1992-இல் பாஜகவில் இணைந்து அதன் மகளிர் பிரிவில் தியோரிநகர் மாவட்டத் தலைவராக இருந்தவர் விஜயலஷ்மி கவுதம். 59 வயதான இவர் முதன்முறையாக முதல்வர் யோகி அமைச்சரவையின் உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.