நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு தாருங்கள்… தமிழ் தலைவர்களிடம் இலங்கை அதிபர் வேண்டுகோள்

கொழும்பு:
இலங்கையில் பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கோத்தபய பதவியேற்றபிறகு முதல் முறையாக நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், அதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.  அப்போது, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தமிழ் தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோத்தபய கேட்டுக்கொண்டார்.
ஒட்டு மொத்த நாட்டிற்கும் தலைவர் என்ற முறையில், அனைத்து சமூகங்கள் மீதும் சமமாக கவனம் செலுத்துவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுக்கு அதிபர் கோத்தபய உறுதியளித்ததாக அதிபர் மாளிகை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
‘பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் நீண்டகாலமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவித்தல், குற்றம்சாட்டப்படாத அல்லது வழக்குத் தொடரப்படாத சந்தேக நபர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது, உண்மையைக் கண்டறியும் நடைமுறையை ஆரம்பித்தல், பயங்கரவாத தடுப்புச் சட்டத் திருத்தம், காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்க்க அரசு செயலாற்றி வருவதாக அதிபர் கூறியுள்ளார். 
முன்னர் பயிர்ச்செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட நிலங்களை விடுவித்தல், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்த்த பின்னர் புதிய அரசியலமைப்பில் திருத்தங்கள் தொடர்பாக விவாதம் செய்தல், வடக்கு-கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை நிறுவுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது’ என அதிபர் மாளிகை ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த சந்திப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கூறுகையில், ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுடன் நாடு செழுமையை நோக்கி செல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். நாம் ஒரு நாடாக ஒன்றிணைய வேண்டும் என்று கூறிய சம்பந்தன், ஒரே நாடு, ஒரே தேசம் என்ற நிலையில், தற்போதைய சவால்களை முறியடிக்க ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அனைவரின் பொறுப்பு என்றார்.
இந்த சந்திப்பின்போது பிரதமர் மகிந்த ராஜபக்சே, அமைச்சர்கள் ஜி.எல்.பீரிஸ், சமல் ராஜபக்சே மற்றும் அலி சப்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2019 நவம்பர் மாதம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, சந்திப்பை நடத்தும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமுறை கேட்டுக்கொண்டது. இரண்டு முறை எந்தக் காரணமும் இன்றி கடைசி நிமிடத்தில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தமிழ்த் தலைவர்கள் கூறினர். 
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறத்து விவாதிப்பதற்கு, தமிழ் தலைவர்களுடனான சந்திப்பை நடத்தும்படி அதிபர் மாளிகை முன்பு கடந்த மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.