யாரை குற்றம் சொல்வது., வெளியான வீடியோவால் வேதனையில் விஜயகாந்த்.!

மது போதையில் மாணவிகள் சீரழியாமல் இருக்க அரசு, காவல்துறை, பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை மது போதைக்கு டாஸ்மாக் கடைகள் அடிமையாகியுள்ளனர். பள்ளிக்கு அருகிலேயே திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் மது போதையில் தள்ளாடியபடியே பள்ளிக்கு வருவது சர்வசாதாரணமாகி வருகிறது. 

மாணவர்கள் மட்டுமல்ல பள்ளி, கல்லூரி மாணவிகளும் மதுபோதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை அவ்வப்போது வாட்ஸ் அப்பில் வலம் வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் உணர்த்துகின்றன. 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்திலேயே மது அருந்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதேபோல் விழுப்புரம் அருகே மாணவி ஒருவர் பள்ளி சீருடையில் சாலையில் நடனமாடிய வீடியோவும் வைரலாகி வருகிறது. 

பள்ளி சீருடையில் கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இல்லாமல் கலாச்சார சீரழிவை கெடுக்கும் வகையில் பொது இடங்களில் மாணவிகள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. 

மது அருந்திய மாணவிகள் மீது பள்ளி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து வன்மையாக கண்டிக்க வேண்டும். பெற்றோர்களும் இனியாவது தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தையும், கலாச்சாரத்தையும் சொல்லி வளர்க்க வேண்டும்.

ஏற்கனவே தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவிகளும், பெண்களும் குடிபோதைக்கு அடிமையானால் பாலியல் குற்றங்கள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். 

நாளைய பாரதம் இன்றைய இளைஞர்கள் கையில். இவர்கள் வருங்கால தூண்கள் என்றெல்லாம் போற்றப்படுகின்ற மாணவ, மாணவிகளின் கையில் மதுபாட்டில்கள் இருப்பது வேதனையின் உச்சம். இதனை ஆரம்பத்திலயே தடுத்து நிறுத்தாவிட்டால் மிகப்பெரிய கலாச்சார சீரழிவை நாம் சந்திக்க நேரிடும். 

இளம் வயதிலேயே பாதை மாறிசெல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பிலும் ஆலோசனைகள் வழங்கி அவர்களை நல்வழிப்படுத்திட வேண்டும். 

யாரை குற்றம் சொல்வது குடித்த மாணவ, மாணவிகளையா அல்லது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துக்கொண்டு குடிக்க அழைக்கும் அரசையா. கஞ்சா, மதுபோதை என இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. 

மேலும், மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து, பல பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை இழந்து தவித்து வருகின்றனர். 

எனவே தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் மதுபோதையில் மாணவிகள் சீரழியாமல் இருக்க அரசு, காவல்துறை, பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.