புதுடெல்லி: நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழு அமைப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நடப்புக் கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியது: “உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உச்ச நீதிமன்றத்தின் மின்னணு கமிட்டி குழு ஒன்றை அமைத்துள்ளது.
இது தவிர உச்ச நீதிமன்ற மின்னணு கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, நேரலை ஒளிபரப்புக்கான மாதிரி விதிமுறைகளை வகுப்பதற்கான துணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் தெரிவிக்கும் விதிமுறைகள், உயர் நீதிமன்றங்களின் கணினி குழுக்களுக்கு அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்படும்.
முதல்கட்டமாக தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், சோதனை அடிப்படையில், 3 மாதங்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டும். பின்னர், கட்டமைப்பு வசதிகளுக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.
குஜராத், ஒரிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பாட்னா மற்றும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றங்கள், காணொலி வாயிலாக நடைபெறும் விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதன் மூலம், ஊடகங்கள் மற்றும் விருப்பமுள்ளவர்களும் இதில் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்