புதுடில்லி,-சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வுகளை தவறவிட்ட மூன்று மாணவர்களுக்கு, மறுதேர்வு நடத்துவது சாத்தியமில்லை’ என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, ‘சிவில் சர்வீசஸ்’ தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.இதன் முதன்மை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கடந்த ஜனவரியில் பிரதான தேர்வுகள் நடத்தப்பட்டன. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால், மூன்று மாணவர்கள் பிரதான தேர்வு களை முழுமையாக எழுத முடியாமல் தவறவிட்டனர்
.இதையடுத்து, தங்களுக்கு மறுதேர்வு நடத்தக்கோரி, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஏ.எஸ்.ஓகா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, மத்திய அரசு தரப்பில், நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘பிரதான தேர்வுகளை தவற விட்ட மாணவர்களுக்கு, மறுதேர்வு நடத்துவது சாத்திய மில்லை’ என, அரசு தரப்பு தெரிவித்து உள்ளது. வழக்கு விசாரணை, வரும் 28க்கு ஒத்திவைக்கப் பட்டது.
Advertisement