`உதவித்தொகை வாங்கித் தருகிறேன்’… மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(41), செங்கல்சூளை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு பெற்றோரை இழந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அரசின் நிதி உதவி பெற்று தருவதாக சுரேஷ்குமார் கூறியுள்ளார். இதற்காக மாணவியின் வீட்டுக்குச் சென்ற அவர், “நிதியுதவி பெறுவதற்கு மாணவியின் பாஸ்போர்ட் அளவு போட்டோ தேவைப்படுகிறது. எனவே அவரை என்னுடன் அழைத்துச் சென்று, போட்டோ எடுத்துக்கொண்டு விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்துவிட்டு திரும்ப அழைத்து வந்து விட்டு விடுகிறேன்” என கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் உறவினர்கள் சுரேஷ்குமாரை திருப்பி அனுப்பிவிட்டனர்.

பாலியல் வன்கொடுமை

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்னர் மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்ற சுரேஷ்குமார், பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரை சந்தித்து, “மாணவிக்கு உதவித்தொகை வாங்கித் தர ஏற்பாடு செய்துள்ளேன். ஆகவே மாணவியை என்னோடு அனுப்பி வையுங்கள்” என கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து தலைமையாசிரியரும் சுரேஷ்குமாரை திட்டி அனுப்பியதாக தெரிகிறது.

சுரேஷ்குமார்

இந்நிலையில், சுரேஷ்குமாரின் உறவினர் கலா என்பவர் அப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கலாவிடம் விஷயத்தை சொல்லி, “மாணவியை தன்னோடு 10 நிமிடங்கள் மட்டும் அழைத்துச்செல்ல அனுமதியுங்கள், நான் மீண்டும் பத்திரமாக அவரை திரும்ப அழைத்து வந்து விடுகிறேன்” என கூறியுள்ளார். இதை நம்பிய கலாவும், மாணவியை தனியே அழைத்து சுரேஷ்குமாருடன் சென்று வருமாறு மோட்டார்சைக்கிளில் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிச்சீருடையுடன் தலைமைஆசிரியருக்கு தெரியாமல் அங்கிருந்து கிளம்பிய மாணவியை, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நென்மேனி கண்மாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார் சுரேஷ்குமார். இதனை அங்கு கால்நடை மேய்ச்சலுக்காக நின்றிருந்தவர்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து, கண்மாயின் பள்ளமான இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய சுரேஷ்குமார், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து, அவரை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றுள்ளார். பள்ளிக்கு வந்த சிறுமி வழக்கத்திற்கு மாறான அமைதியுடன் இருந்ததால் சந்தேகமடைந்த அவரின் தோழிகள் என்ன நடந்ததென்று விசாரித்துள்ளனர். ஆனால் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த மாணவி, பள்ளிவிட்டதும் நேரே வீட்டுக்கு சென்று, தனது உறவினர்களிடம் நடந்த விபரங்களை கூறி அழுதுள்ளார். இதற்கிடையே, அங்கு வந்த மேய்ச்சல்காரர்களும் மாணவியை சுரேஷ்குமார் அழைத்துச் சென்றதையும் கூறியுள்ளனர். இச்சம்பவம்குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுரேஷ்குமார் மற்றும் கலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாலியல் தொல்லை

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படு வந்த நிலையில் தற்போது ‌தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தனசேகரன் தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அவர் பரிந்துரை செய்தார். சுரேஷ்குமாரின் உறவினர் கலா விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வி ஜே.கலா ஆஜராகி வாதாடினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.