சென்னை: தமிழ்நாட்டில் இன்று 26வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 1600 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெறுகிறது. சென்னை ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தாமோ அன்பரசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. நேற்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,612 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தடுப்பூசி முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதுபோல, இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும், அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ஆலந்தூர் தொகுதியில் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவ வாயப்பு இருப்பதாக தெரிவித்தவர், 4வது அலையை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றார்.
சென்னையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவ 55,30,900 பேரில் இதுவரை 99 சதவிகிதம் பேர் முதல்தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர் என்றும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 81 சதவிகிதம் பேருக்கு போடப்பட்டு இருப்தாகவும் கூறினார்.