புதுடெல்லி: லக்னோவில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உத்தர பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்ய நாத் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 2 துணை முதல்வர்கள் உட்பட 52 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
உத்தர பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து லக்னோவின் அடல் பிஹாரி வாஜ்பாய் எகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
50,000 பேர் பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் விழாவில் பங்கேற்றனர். பாஜகவினர், பொதுமக்கள் என சுமார் 50,000 பேர் கிரிக்கெட் மைதானத்தில் குழுமியிருந்தனர்.
மாலை 4.00 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. முதலாவதாக யோகி ஆதித்யநாத், முதல்வராக பதவி ஏற்றார். மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் அவருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
உத்தர பிரதேசத்தில் கடந்த 37 ஆண்டு கால வரலாற்றில் பதவி காலத்தை நிறைவு செய்த முதல்வர்கள், தொடர்ச்சியாக 2-வது முறையாக முதல்வர் பதவியேற்றது கிடையாது. முதல்வர் யோகி ஆதித்ய நாத் 2-வது முறையாக பதவியேற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
கேசவ் பிரசாத் மவுரியாவும், பிரஜேஷ் பாதக்கும் துணை முதல்வர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து 16 கேபினட் அமைச்சர்கள், 14 தனி அதிகாரம் மற்றும் 20 இணை அமைச்சர்கள் என 50 பேர் பதவி ஏற்றனர்.
அடுத்து வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலை மனதில் வைத்து உத்தர பிரதேச அமைச்சரவை தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அமைச்சரவை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா, பலமுறை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்ய நாத்துடன் ஆலோசனை நடத்தினார். இதில் பலரும் எதிர்பாராதபடி, தேர்தல் தோல்விக்கு பிறகும் கேசவ் பிரசாத் மவுரியா, மீண்டும் துணை முதல்வராகி உள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அவர் உத்தர பிரதேச மேல்சபை உறுப்பினராக உள்ளார்.
மற்றொரு துணை முதல்வரான பிரஜேஷ் பாதக், பிராமண சமூகத்தின் முக்கிய முகமாகக் கருதப்படுபவர். காங்கிரஸின் பிராமண தலைவராக இருந்து பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாத் கேபினட்டில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜாட், தாக்கூர், தாழ்த்தப்பட்டோர் என அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாக அமைச்சரவை உள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு இடம்
பாஜகவின் கூட்டணி கட்சிகளான அப்னா தளம் (சோனுலால்) கட்சி சார்பில் ஆஷிஷ் படேலுக்கு கேபினட் பதவி கிடைத்துள்ளது. அவர் அக்கட்சியின் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான அனுப்பிரியா படேலின் கணவர். மற்றொரு கூட்டணியான மீனவர் சமூக ஆதரவு பெற்ற நிஷாத் கட்சி தலைவர் சஞ்சய் நிஷாத்துக்கு கேபினட்டில் இடமளிக்கப்பட்டிருக் கிறது.
லக்னோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பேரவைத் தலைவரும், பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளருமான தானிஷ் ஆஸாத் அன்சாரி இணை அமைச் சராகி உள்ளார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ், அவரது தந்தையான முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படக் குழுவினர், உத்தர பிரதேசத்தின் முக்கிய மடாதிபதிகள், சாதுக்கள், தொழிலதிபர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.