இந்தியாவில் கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது சரியா? மருத்துவர் கூறுவது என்ன?

கோவிட்-19 கட்டுப்பாடுகளை மார்ச் 31-ம் தேதி முதல் திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி மத்திய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்றன. கோவிட்-19 தொடர்பான பேரிடர் மேலாண்மை விதிகள் 2020-ம் ஆண்டு மார்ச் முதல் நம் நாட்டில் அமலில் உள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விதிகள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன.

People queue up for COVID-19 vaccine

அதன்படி மார்ச் 31-ம் தேதிக்கு மேல் பல்வேறு நிறுவனங்களுக்கு வழக்கம் போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் நேரடி வகுப்புகளோடு இயங்கலாம். திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

பொது இடங்களான ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு நிலையங்கள் ஆகியவை முழுமையான அளவு வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் 100% அனுமதி, வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் வழக்கம்போல் எந்தத் தடையுமின்றி செயல்படலாம்.

அனைத்து விதமான பொது போக்குவரத்துகளும் 100% பயணிகளுடன் இயங்கலாம், அனைத்து‌ விதமான தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இயங்கலாம். இந்தக் கட்டுப்பாட்டுத் தளர்வுகளை அறிவித்திருந்தாலும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற நோய்த்தடுப்பு நெறிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்படி மக்களை மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் பொதுமக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு கோவிட்-19 தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் ” என அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கோவிட் 19 கட்டுப்பாடுகள் மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளன. அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிவது போன்ற கோவிட் தடுப்பு நடைமுறைகளை மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி கடைப்பிடிக்கவே வேண்டும்.

இதுதவிர, ஏதாவது பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரிப்பது போல் தோன்றினால், அந்தப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பும், கட்டுப்பாடுகளும் தேவை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கோவிட் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இது நல்ல விஷயம்தான் என்றாலும், மக்கள் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்படி நோய்த்தொற்று நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்கிறார்.

ஊரடங்கு

மத்திய அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் இந்தியாவில் ஜூன் 22-ம் தேதி நான்காம் அலை ஏற்படலாம் என்ற கணிப்பை ஐஐடி கான்பூர் வெளியிட்டது. அது தனிப்பட்ட நிறுவனத்தின் கணிப்பு என்று மத்திய சுகாதாரத் துறை விளக்கமளித்தது. மற்றொருபுறம் தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப்போல் இன்னும் சில மாதங்களில் நம் நாட்டிலும் நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மற்றொரு தரப்பினர் தளர்வுகள் கொடுப்பது சரியே எனக் கூறுகின்றனர். எய்ம்ஸ் மருத்துவ வல்லுநர்கள் `இனி இந்தியாவில் கோவில்-19 பாதிப்பு அதிகமாக பாதிக்க வாய்ப்பில்லை. அதனால் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நெறிமுறைகளைத் தளர்த்தலாம்’ என்று பரிந்துரை அளித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம், CDC போன்ற அமைப்புகள் எவ்வித அறிவிப்புகளையும் வெளியிடாத நிலையில், இதுபோன்ற தளர்வுகளை அறிவித்து சரிதானா என்று சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதனிடம் கேட்டோம்.

மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்

“கோவிட்- 19 தொற்றைப் பொறுத்தவரையில் நல்ல நேரம் என்பது என்றும் வரப்போவது கிடையாது. சுற்றிச்சுற்றி இது போய்க்கொண்டே இருக்கிறது. பிரச்னை எல்லாம் என்றாவது ஒருநாள் சரியாகிவிடும் என்று நினைப்பதே மிகவும் தவறானது. இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்ற முடிவை நாம் நிச்சயமாக ஒருநாள் எடுத்தே ஆகத்தான் வேண்டும். மேலை நாடுகளில் நோய்த்தொற்று அதிகமாக இருக்கும் காலங்களில் கட்டுப்பாடுகள் இருந்தாலும்,தொற்று எண்ணிக்கை குறைந்ததும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வர்த்தகத்தை மேம்படுத்த வழிவகுக்கிறார்கள்.

நாமும் அது மாதிரியான முடிவை எடுக்க வேண்டும். இந்த முடிவால் மக்களுக்கு ஒரு நம்பிக்கை உருவாகும். அடுத்த அலை திரும்ப வருமா வராதா என்பதையெல்லாம் இன்று நம்மால் முடிவு பண்ண முடியாது. இதற்கு முன்பு கூறிய அனைத்துக் கணிப்புகளும் அப்படியே நடந்து விடவில்லையே. வரும் காலங்களில் நோய் பாதிப்பு எப்படி இருக்கும் என்று இப்போது நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் இப்போதைய நிலவரப்படி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது நல்ல முடிவுதான்.

COVID-19

நிலைமையை கவனமாகக் கண்காணிப்பதோடு நோய் பாதிப்பு அதிகரிப்பது போல் தோன்றினால் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம். அதுவரையில் அரசின் இந்த முடிவு பாராட்டப்பட வேண்டியதே. இது நாம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பலாம் என மக்களுக்கு நம்பிக்கையைத் தரும்”என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.