சியோல்: கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஒரு அதிநவீன ஏவுகணையை வட கொரியா பரிசோதித்தது.
இது குறித்து வட கொரியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வட கொரிய அதிபர் கிம் ஜோங்உன் மேற்பார்வையில், நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம்பாயும் ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ‘வாசோங் – 17’ என்ற இந்த ஏவுகணை, 67 நிமிடங்களில், 1,090 கி.மீ., துாரம் பயணித்து, வட கொரியா மற்றும் ஜப்பான் இடையே உள்ள கடல்பகுதியில் விழுந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த ஏவுகணை திட்டத்திற்கு உதவிய ரஷ்யா மற்றும் வட கொரியாவை சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டது. இந்த ஏவுகணை, அமெரிக்காவை தாக்கும் திறன் உடையது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, வாசோங் – 17 ஏவுகணை சோதனையை மேற்பார்வையிடும் அதிபர் கிம் ஜோங் உன்னின், ‘வீடியோ’ ஒன்று வெளியாகி உள்ளது. திரைப்பட காட்சியைப் போல் அமைந்துள்ள இந்த வீடியோ, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Advertisement