மும்பை: மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவது நாட்டின் வளர்ச்சிக்கு பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் தற்போதுள்ள இளைஞர்களுக்கு பெரும் சுமையாக மாறும் என எஸ்.பி.ஐ., வங்கியின் ஆய்வறிக்கையில் எச்சரிக்கை மணி எழுப்பப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பலரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என கூறி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகளை அள்ளினார். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதாக அறிவித்துள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
டிசம்பர் 2003 வரை அமலில் இருந்த ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் எனப்படுகிறது. இத்திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை மாதம்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. நடப்பில் வரி செலுத்துவோரின் பணத்தை கொண்டு ஓய்வூதியதாரர்களுக்கு நிதியளித்தனர். இத்திட்டத்தால் இந்தியாவின் ஓய்வூதியக் கடன் கட்டுக்கடங்காமல் சென்றது. அதனை சமாளிக்க வாஜ்பாய் அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, 2004ல் தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற அருமையான ஒரு திட்டத்தை அமல்படுத்தியது.
புதிய ஓய்வூதியத் திட்டம்
என்.பி.எஸ்., எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் தான் புதிய ஓய்வூதியத் திட்டம் எனப்படுகிறது. இது அரசு ஊழியர்களுக்கு மட்டும் இருந்தது. 2009 முதல் அனைத்து இந்திய குடிமக்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் படி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10% என்.பி.எஸ்.,க்கு செல்லும். அரசின் பங்களிப்பாக 14% என மொத்தம் 24 சதவீத தொகை அதில் சேரும்.
இப்பணம் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு பெருக்கப்படுகிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட வேண்டிய அளவை நாமே முடிவு செய்யலாம். ஓய்வு வயதை எட்டியவுடன் வட்டியுடன் சேர்ந்திருக்கும் பல லட்ச ரூபாயில் 60 சதவீதத்தை அரசு ஊழியர்கள் மொத்தமாக பெறுவர். 40% தொகை அதிலேயே டெபாசிட் செய்யப்பட்டு மாதம் தோறும் ஓய்வூதியம் கிடைக்கும்.
ரூ.1 கோடி ஓய்வூதிய பலன்
உதாரணத்திற்கு 30 வயதில் பணியில் சேரும் ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.35,000 என கொள்வோம். அதிலிருந்து 24 சதவீதமான ரூ.8,400 (அரசின் பங்களிப்பு 14% அடக்கம்) தேசிய ஓய்வூதித் திட்டத்திற்கு செல்லும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த பங்களிப்பு தொடரும். தற்போது வரை இத்திட்டம் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீத கூட்டுவட்டியில் வருவாய் ஈட்டியுள்ளது.
நாம் 8% கூட்டுவட்டி என எடுத்துக்கொண்டால் கூட ரூ.8,400 மாதாந்திர தொகை 60ம் வயதில் ரூ.1.24 கோடியாக வளர்ந்திருக்கும். (தகவல்: எஸ்.பி.ஐ., பென்ஷன் கால்குலேட்டர்). அதில் 60% தொகையான ரூ.74 லட்சத்தை 60 வயது நிறைவில் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகை ரூ.49.8 லட்சத்தை மாத ஓய்வூதியத்திற்காக கட்டாயம் மறு முதலீடு செய்ய வேண்டும். அதிலிருந்து 6% வட்டி என்றாலும் மாதம் ரூ.25 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.
எஸ்.பி.ஐ., அறிக்கை!
இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியாகியுள்ளது. அது பற்றி எஸ்.பி.ஐ.,யின் தலைமை பொருளாதார நிபுணர் சௌமியா கந்தி கோஷ் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்புவது என்பது நிதித் தற்கொலைக்கு சமமானது. அது நாட்டின் வளர்ச்சிக்கும், இளைய தலைமுறையினர் மீது பெரிய சுமையையும் ஏற்படுத்தும். ஓய்வூதிய கடனை பூதாகரமாக்கும் என கூறினார்.