தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு விடுபட்டுள்ள 62 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் தொடங்கியது.
இந்நிலையில், தென்காசி, குற்றாலம் பேரூராட்சி மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்ததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கரூர், புலியூர் பேரூராட்சி மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதுமான உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளனர்.
கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலில் திமுக – அதிமுகவினர் மோதல் ஈடுபட்டுள்ளது. இருதரப்பு மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக 8, திமுக 6, சுயேட்சை ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.