தமிழகம் வளர்ந்த மாநிலம் என்றால் பொங்கல் பரிசு கொடுப்பது ஏன்?- கமல்ஹாசன் கேள்வி

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு பதில் உரை வழங்கிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்பதையே பல்வேறு ஆய்வுகள் காட்டுவதாக தெரிவித்தார்.

எந்த ஏழை நாட்டிலும் 52 சதவீதத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் கல்லூரியில் போய் சேர மாட்டார்கள், 90 சதவீதம் குடும்பங்களுக்கு மேல் செல்போன் வைத்திருக்கிறார்கள், 75 சதவீதம் குடும்பங்களுக்கு மேல் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். அதில் 14 சதவீதம் மட்டுமே அரசாங்கம் தந்த வீடுகளில் வசிக்கிறார்கள், 66 சதவீதம் வீடுகளில் இரு சக்கர வாகனம் இருக்கிறது ஆகிய தரவுகளை முன்வைத்தார்.

ஒரு பக்கம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளால் உயர் படிப்பை தொடர முடியாத காரணத்திற்காக ரூபாய் 1000 அவர்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சொல்லி விட்டு, மறுபக்கம் 52 சதவீத மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்கிறார்கள் என்று பெருமையாக பேசுகிறோம்.

வீடு இருக்கும் பட்சத்தில் அவர் சொல்வது போல் கிராமத்தில் வசிக்கும் 90 சதவீதத்தினருக்கு சொந்த வீடு இருக்கிறது என்றாலும், அதில் எத்தனை குடிசை வீடுகள், அதில் எத்தனை வீடுகள் முறையான இடத்தில் இல்லாமல் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது போன்ற தரவுகள் நம்மிடம் உண்டா? குறிப்பாக அதில் எத்தனை வீடுகளில் கழிவறைகள் உள்ளன என்று நமக்கு தெரியுமா? நகர்புறத்தில் மக்கள் வசிக்கும் சொந்த வீடுகளில் எத்தனை லட்சக்கணக்கான வீடுகள் கடனில் வாங்கப்பட்டுள்ளன என்ற தரவுகள் தெரியுமா?

66 சதவீதம் பேர் இருசக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதில் எத்தனை கடனில் வாங்கப்பட்டுள்ளன, அந்தக் கடனை கூட கட்ட முடியாமல் கொடுமையான கொரோனா காலத்தில் எவ்வளவு பேர் தங்களின் வண்டியை இழந்தார்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்ற புள்ளி விவரம் நமக்கு தெரியுமா?

வளர்ந்த மாநிலம் என்றால் பொங்கல் பரிசு எதற்கு? மகளிர்க்கான இலவச பேருந்து எதற்கு? வறுமை ஒழிக்கும் 100 நாள் ஊரக வளர்ச்சித் திட்டம் எதற்கு?

இவை பற்றி முழுமையாக பேசாமல், நவ நாகரிகமான நகர்புறத்தில் இருந்து எந்த ஒரு கருத்தையும் சொல்வது எளிது. உண்மையான தமிழகத்தை தெரிந்து கொள்ள பைபாஸ் சாலைகளை தவிர்த்து கிராமப்புறங்களுக்கு சென்றால்தான் 100 ரூபாய் கூலிக்கு எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்பது போன்ற உண்மைகள் நமக்கு புரியும். இதை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக காட்ட முயற்சிப்பது வருத்தத்தையே தருகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.