லக்னோ: உ.பி. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவை கூடியதும் முறைப்படி அவர் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
உத்தர பிரதேச தேர்தலில், பாஜககூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. பாஜக மட்டும் 255 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவு. அதேநேரத்தில் கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளை கைப்பற்றிய சமாஜ்வாதி கட்சி, இந்தத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. சமாஜ்வாதி மட்டும் 111 தொகுதிகளை கைப்பற்றியது.
உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 2 துணை முதல்வர்கள் 43 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அசம்கர் மக்களவை உறுப்பினராக ஏற்கெனவே பதவி வகித்து வந்தார். எம்.பி.யாகவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் களம் கண்டார். எம்எல்ஏவாக தேர்வானதால் அவர் இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் தொடர்ச்சியாக அவர் இன்று உ.பி. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் இன்று முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் ஏகமனாதக தேர்வு செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான அரசியலை தீவிரமாக முன்னெடுக்க அகிலேஷ் யாதவ் ஏற்கெனவே முடிவு செய்துள்ளார்.
அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலிமைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை கூடியதும் முறைப்படி அவர் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
முன்னதாக தாக நேற்று யோகி ஆதித்யநாத் பதவியேற்றது குறித்து அவர் கூறுகையில் ‘‘சமாஜ்வாதி கட்சி அரசால் கட்டப்பட்ட மைதானத்தில் புதிய அரசு பதவியேற்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமாணம் என்பது அரசு அமைப்பதற்காக மட்டும் அல்ல. மாநில மக்களுக்கும் சேவை செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய பாஜக அரசு தேர்தல் முடிந்தவுடனேயே பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தி விட்டது’’ எனக் கூறினார்.