'ஒருமுறை ஆர்எஸ்எஸ் தொண்டர் வீட்டுக்கு சென்றபோது…' – மோடியின் கதைகள் சொல்லும் தளத்தைப் பகிரும் அமைச்சர்கள்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரபலங்கள், சாமானியர்கள், அவருடன் பயணிப்பவர்கள் என பலரும் பகிர்ந்துகொண்டுள்ள சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிரும் சிறப்பு இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்திற்கு modistory.in என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் பற்றி மத்திய அமைச்சர்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘இதுவரை சொல்லப்படாத, கேட்கப்படாத கதைகள் உள்ளன. ஒரு சிறந்த நபருடனான, அரசியல் ஆளுமையுடனான சந்திப்புகள் குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன’ எனப் பதிவிட்டுள்ளார். இதேபோல் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்ட பலரும் இந்த இணையதளம் குறித்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

‘கடைநிலை மனிதனுக்காகா நான் நிற்பது ஏன்? மோடிஸ்டோரி.இன் இணையதளத்தில் டாக்டர் அனில் ராவல் என்பவர் 1980-ல் நரேந்திர மோடியுடன் தான் பயணிக்க நேர்ந்தபோது அவர் சொன்ன ஒரு கதை குறித்து பகிர்ந்துள்ளார். எதற்காக நீங்கள் கடைநிலை மனிதனுக்காக நிற்கிறீர்கள் என்ற கேள்விக்கு மோடி கூறிய பதிலை அவர் அந்த இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி என்னிடம், “நான் ஒரு முறை ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரது வீடு ஒரு குடிசை. உள்ளே அவரது மனைவியும் குழந்தையும் இருந்தனர். அவர்கள் எனக்கு பாதி ரொட்டியும், ஒரு கிண்ணத்தில் பாலும் கொத்தனர். அந்தப் பாலை குழந்தை ஏக்கத்துடன் பார்த்தது. நான் எனக்குக் கொடுக்கப்பட்ட ரொட்டியில் பாதியை சாப்பிட்டுவிட்டு, பாலை வைத்துவிட்டேன். அந்தப் பாலை அந்தக் குழந்தை ஒரே மூச்சில் குடித்தது. அதைப் பார்த்து எனது கண்களில் கண்ணீர் நிறைந்தது. அன்று தான் நான் கடைநிலை மனிதரின் வாழ்க்கையை முன்னேற்றப்பாடுபட வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்றார்.

இவ்வாறாக டாக்டர் அனில் ராவல் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். இதுபோல் யார் வேண்டுமானாலும் தங்களின் அனுபவங்களைப் பகிரும் வகையில் உங்கள் கதையைப் பதிவு செய்யுங்கள் (Register your Story) என்ற ஆப்ஷன் உள்ளது.

மோடி ஸ்டோரி என்ற இணையதளத்தின் இலச்சினையாக ஒரு தேநீர் கோப்பை வைக்கப்பட்டுள்ளது. தேநீர் நிறத்திலேயே இணையதளத்தின் பிரதான நிறமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.