புதுடெல்லி: உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை நிறைவு செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த தகவலை மக்களவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இப்பிரச்சனையில் திமுக எம்.பி கனிமொழி உள்பட சுமார் 50 எம்.பிக்கள் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தனர். இவற்றுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி அளித்த விரிவானப் பதில் விவரம்: “ஏறத்தாழ 22, 500 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக இந்தியா திரும்பி இருக்கிறார்கள். உக்ரைனில் இருக்கும் நமது தூதரகம் அங்கே தூதரகத்தில் பதிவு செய்துள்ள மீதமிருக்கும் இந்தியர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.
இன்னமும் சுமார் 50 இந்தியர்கள் உக்ரைனில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களில் 15 முதல் 20 பேர் இந்தியாவுக்குத் திரும்ப விருப்பமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்தியா திரும்புவதற்கு அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஹர்ஜத் சிங் என்ற இந்தியர் போர்ச் சூழலில் துப்பாக்கி குண்டு காயங்களால் பாதிக்கப்பட்டார். அவர் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வரப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்.
கார்கிவ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வந்த நவீன் சேகரப்பா ஞான கவடர் என்ற மருத்துவ மாணவர் துரதிர்ஷ்டவசமாக மார்ச் 2-ஆம் தேதி உக்ரைனில் உயிரிழந்தார். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் தொடங்கிய சூழலில் கிவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் பிப்ரவரி 15ஆம் தேதி அவசியமான காரணங்கள் இல்லாமல் உக்ரைனில் தங்கியிருக்க வேண்டாம் என்றும் அவ்வாறு இருப்பவர்கள் தற்காலிகமாக வெளியேறலாம் என்றும் அறிவுரை வழங்கியது. பிப்ரவரி 20 மற்றும் 22 தேதிகளில் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை உக்ரைன் விதித்திருந்தது.
இந்நிலையில், அந்த நாட்டோடு பேசி உடனடியாக கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, இந்தியாவுக்கான நேரடி விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக பிப்ரவரி 23ஆம் தேதி வரை சுமார் 4,000 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து நேரடி மற்றும் இணைப்பு விமானங்கள் மூலம் இந்தியா திரும்பினர். பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மோதல் பெரிதாக வெடித்த நிலையில், வான்வழிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய அரசாங்கம் 18,500 இந்தியர்களை தாயகம் கொண்டு வந்துள்ளது.
ஆப்ரேஷன் கங்கா மீட்புத் திட்டத்தின்படி 90 விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 76 விமானங்கள் தனியார் போக்குவரத்து விமானங்கள். 14 விமானங்கள் இந்திய விமானப்படை விமானங்கள் ஆகும். இவற்றுக்கான செலவை இந்திய அரசாங்கம் செலுத்தி வருகிறது.
உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு நமது அரசாங்கம் எல்லா வகையிலும் உதவிகளை செய்து வருகிறது. அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் உணவு மருத்துவ உதவி, உக்ரைனில் அருகிலுள்ள மேற்கத்திய நாடுகளின் எல்லையை கடப்பதற்கு உதவி என எல்லா வகையிலும் இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
போரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 இந்தியர்களை உடல்களை இந்திய தூதரகம் கண்ணியமான முறையில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வியை நிறைவு செய்வதற்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சகங்கள் பல்வேறு கோணங்களில் பரிசீலித்து வருகின்றன.
உக்ரைனில் இருக்கும் நமது இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களை தொடர்பு கொள்வதிலும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைப்பு செய்து கொடுப்பதிலும் உணவு வசதிகளை செய்து கொடுப்பதிலும் அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளின் துணையோடு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அங்குள்ள இந்தியர்களை முழுமையாக இந்தியாவுக்கு அழைத்து வரும் வரை உக்ரைனிய அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் உறுதியான தொடர்பில் இருக்கிறது. கள ரீதியிலான உதவிகள் இப்படி என்றால் ராஜதந்திர ரீதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நமது பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டின் அதிபர்களுடன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவர் தனது பேச்சின் போது இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது பற்றி அந்த தலைவர்களிடம் அழுத்தம் கொடுத்துள்ளார். குறிப்பாக கர்கிவ், சுமி ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது தொடர்பாகவும் பிரதமர் அழுத்தம் கொடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் அதோடு மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான ருமேனியா, ஸ்லோவாக், ஹங்கேரி, போலந்து நாடுகளின் ஆட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசினார்.
இதில், உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியர்களை அவர்களின் நாடுகள் வழியாக பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அங்குள்ள இந்தியர்களை காப்பாற்றுவதற்கான ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதேபோல நமது வெளியுறவுத் துறை செயலாளர் டெல்லியில் உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் தூதர்களுடன் தொடர்பில் இருக்கிறார். மேலும் ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் தலைநகரங்களில் உள்ள இந்தியாவின் தூதர்களோடும் தொடர்ந்து தொடர்புகளைப் பேணி இந்தியர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்கிறார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.