நெடுந்தூரப் பயணங்களின்போது பைபாஸ்களில் இருக்கும் மோட்டல்கள்தான் நமது பர்ஸைப் பதம் பார்க்கின்றன. கொடுக்கும் விலைக்கேற்ற தரமும் உணவில் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்னை சென்னையிலிருந்து தென் பகுதிக்குச் செல்லும் பேருந்துகளில் பயணிப்பவர்கள் அடிக்கடி எதிர்கொள்வதை வைத்து ஜூனியர் விகடனில் இரண்டு முறை செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக மோட்டல்களில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டது மட்டுமின்றி, தரமற்ற உணவகங்களுடனான டெண்டரையும் கேன்சல் செய்தனர். அதன் அடுத்தக்கட்டமாக புதிதாக மோட்டல்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதில் முதலில் வெறும் சைவ உணவு என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. இதனைக் கண்டித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியானதால், சைவம் மற்றும் அசைவம் என டெண்டர் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
எதனால் இந்த தடுமாற்றம்? இதன் பின்னால் இருக்கும் சூட்சமம் என்ன? என்பது குறித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மத்தியில் விசாரித்தோம். “நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக நல்லெண்ணத்தில் செய்தி வெளியிட்டீர்கள். ஆனால் அது துறை சார்ந்த சில `முக்கிய’ நபர்களுக்கு சாதகமாகப் போய்விட்டது. ஒட்டுமொத்தமாக டெண்டரைக் கேன்சல் செய்துவிட்டு புது டெண்டர் விட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், சாதாரண சிறிய மோட்டல்கள் இந்த டெண்டரில் பங்கேற்கவில்லை. பங்கேற்றாலும் ஒப்பந்தம் போடமாட்டார்கள். உயர்தர சைவ ஓட்டல்கள் பலவகை உள்ளன. அவைதான் இந்த டெண்டரில் பங்கேற்றுள்ளன. அவர்களுக்குத்தான் ஒப்பந்தம் கொடுக்கப்பட இருக்கிறதாம். அத்தகைய ஓட்டல்கள் எல்லாமே சைவம் என்பதால்தான், முதலில் டெண்டரில் சைவம் மட்டுமே குறிப்பிடப்பட்டது. பிறகு அது பிரச்னையானதும் அசைவத்தையும் சேர்த்துவிட்டனர். ஒரு வார்த்தை சேர்த்தாலும், ஒப்பந்தம் கொடுக்கப்பட இருப்பது என்னவோ சைவ ஓட்டல்களுக்குத்தானாம்.
சாலைப் பயணங்களில் உணவு அருந்தும் கலாசாரம் நூற்றாண்டுகளாகத் தொடருகிறது. முன்பெல்லாம் ஓட்டுநருக்கு எங்கு இடவசதி இருக்கிறதோ, எங்கு பசிக்கிறதோ அங்கே அருகிலிருக்கும் ஓட்டலில்தான் பேருந்தை நிறுத்துவார். மக்களும் அங்குதான் சாப்பிட வேண்டும். பேருந்துகள் தொடர்ச்சியாக நம் ஓட்டலுக்கு வர வேண்டும் என்பதற்காக ஓட்டல் முதலாளிகள், பேருந்து ஓட்டுநரையும், நடத்துநரையும் கவனிப்பார்கள். ஆரம்பத்தில் இருவரிடமும் பாதியளவு தொகைதான் பெற்றார்கள், அதன்பின் இருவருக்கும் இலவசமாக உணவு கொடுத்தார்கள்.
சிலகாலம் கழித்து சாப்பாட்டுடன் இரவு முழுவதும் விழித்திருந்து பேருந்து ஓட்டுவதற்காக சிகரெட் பாக்கெட்டுகள், பாக்குகளைக் கொடுத்தார்கள். கூடவே காலையில் பேருந்தை நிறுத்திவிட்டுச் சாப்பிட பார்சலும் கொடுத்தார்கள். அதெல்லாம் அந்தக்காலம்!
இப்போதோ ஓட்டுநர் தான் நினைக்கும் ஓட்டல்களிலும் நிறுத்தமுடியாது, பயணிகள் சொன்னாலும் நிறுத்தமுடியாது, அரசு எங்கு சொல்லி இருக்கிறதோ அங்குதான் நிறுத்தமுடியும். அதிலும், பேருந்தை தொடர்ச்சியாக இங்கு நிறுத்தாவிட்டால் நிர்வாகத்தை புகார் செய்துவிடுவேன் என ஓட்டுநர்களை ஓட்டல் முதலாளிகள் மிரட்டும் காலம் வந்துவிட்டது. இப்போது புதிய ஒப்பந்தம் போட்டது தவறல்ல, ஆனால் முன்புபோல விலை நிர்ணயம் செய்யாததுதான் தவறு. கொடுக்க வேண்டிய கமிஷனைக் கொடுத்துவிட்டேன், இனி நான் என் விலைக்கு விற்றுக்கொள்கிறேன் என்று அந்த ஓட்டல்கள் முடிவெடுத்தால் மீண்டும் பயணிகள் முன்பைவிட மோசமான அனுபவத்தைத்தான் சந்திக்க வேண்டும்” என்றனர்.
போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் நம்மிடம், “புதிய டெண்டரில் அதிகபட்ச சில்லரை விலை என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள். அது எவ்வளவு என்று குறிப்பிடவில்லை. சாதாரண ஓட்டல்களில் ஒரு இட்லிக்கான எம்.ஆர்.பி 5 ரூபாய் என்றால், பெரிய ஓட்டல்களில் 22 முதல் 25 ரூபாய். இதே விலையில் ஓட்டல்கள் கொடுத்தார்களானால் கண்டிப்பாக மக்களால் தாங்கமுடியாது. ஏனெனில், அரசுப் பேருந்துகளில் வருவோர் எல்லோருமே ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான். விலை நிர்ணயம் செய்யாததால் குறிப்பிட்ட ஓட்டல்கள் தான்தோன்றித்தனமாக விலையை ஃபிக்ஸ் செய்ய நேரிடும்.
காய்கறிகளுக்கு தினந்தோறும் விலை நிர்ணயிக்கிறார்கள், எண்ணெய், தங்கம் போன்றவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், இதுபோன்ற ஓட்டல்களுக்கு ஏன் விலை நிர்ணயம் செய்யவில்லை? கமிஷன் தொடர்பான விவகாரம்தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை தனியார் நடத்தினாலும் அரசுதானே ஃபீஸ் நிர்ணயம் செய்கிறது. அதுபோல, தனியார் ஓட்டல்களுக்கு ஏன் அரசு உணவுக்கான விலை நிர்ணயம் செய்யக்கூடாது?
இன்னொரு சிக்கல் என்னவென்றால், சென்னையிலிருந்து தென் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் உளுந்தூர்பேட்டையில்தான் ஓட்டலில் நிறுத்த வேண்டுமாம். கோயம்பேட்டில் இரவு 7 மணிக்கு பேருந்தை எடுத்தால் உளுந்தூர்பேட்டை செல்ல நள்ளிரவு 12 மணிக்கு மேலாகிவிடும். குறைந்தபட்சம் இரவு 10 மணிக்காவது ஓட்டுநரோ, பயணிகளோ சாப்பிட வேண்டாமா? நள்ளிரவு சாப்பிட்டுவிட்டு பேருந்து ஓட்டுனால் தூக்கம் வராதா? இதையெல்லாம் போக்குவரத்துத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் உள்ள ஒரே நன்மை, கழிவறைகள்தான். பெரும்பாலான மோட்டல்களில் கழிவறைகள் மோசமாக இருக்கும், அதற்கே 5 ரூபாய் கேட்பார்கள். ஆனால், உயர்தர ஓட்டல்களில் கழிவறைகள் சுத்தமாக இருக்கும் என்பதால் பிரச்னையில்லை!” என்று முடித்தார்.