துபாய் எக்ஸ்போ 2022 -ல் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் 5 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். நேற்று எக்ஸ்போவை பார்வையிட்ட அவர், இன்று ஐக்கிய அமீரக முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். அவர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.
5 ஆயிரம் கோடி ரூபாயுடன் புறப்பட்ட ஸ்டாலின்
இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் 5 ஆயிரம் கோடி ரூபாயை துபாய்க்கு கொண்டு சென்றுள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றஞ்சாட்டை முன்வைத்தார். துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க ஏன் இவ்வளவு பணம்? துபாய் பயணத்தின் மர்மம் என்ன? சொந்த முதலீட்டை செய்வதற்காக திமுக இந்த பயணத்தை மேற்கொள்கிறதா? என கேள்விகளை அடுக்கியிருந்தார்.
அண்ணாமலைக்கு திமுக வக்கீல் நோட்டீஸ்
இந்நிலையில், முதல்வரின் இந்தப் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமால் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் இன்று அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள நோட்டீசில், ” திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022-ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.
நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பு
முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.
பொது வெளியில் பகிரங்க மன்னிப்பு
இதற்காக நீங்கள் பொது வெளியில் 24 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லையென்றால், உங்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்.
அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.