நிதி மசோதா நிறைவேற்றம்
பார்லிமென்டில், பிப்., 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், துறைகளுக்கான மானிய ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா, நேற்று முன்தினம் லோக்சபாவில் நிறைவேறியது. அடுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவும் நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு மசோதாக்களுக்கும் ராஜ்யசபாவில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. நிதி மசோதா நிறைவேற்றத்தின் வாயிலாக, மத்திய பட்ஜெட் நடைமுறை முடிவடைந்துள்ளது.
எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
லோக்சபாவில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின்போது, காங்., – எம்.பி., கவுரவ் கோகோய் கூறியதாவது:நம் நாட்டில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. ஒமைக்ரான் பரவலில் இருந்து இருந்து மீண்டு வந்துள்ள மக்கள், இன்னும் எவ்வளவு பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்குமோ என்பது தெரியவில்லை. தேர்தல் முடியும் வரை உயராத இவற்றின் விலைகள் இப்போது அதிகரிப்பது ஏன். இவ்வாறு அவர் கூறினார்.இந்த விவகாரத்தை வைத்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
டில்லி மாநகராட்சி மசோதா தாக்கல்
கடந்த 2011ல், டில்லி மாநகராட்சி, தெற்கு டில்லி, வடக்கு டில்லி, கிழக்கு டில்லி என மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. எனினும், மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க முடியாதது உள்ளிட்ட நிர்வாக சிக்கல்கள் இருந்தன. இதற்கு தீர்வு காண மூன்று மாநகராட்சிகளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், அதற்கான சட்ட திருத்த மசோதா, எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
‘ஒருவர் கூட உயிரிழக்கவில்லை’
லோக்சபாவில், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பார்தி பிரவீன் பவார் கூறியதாவது: ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. அதற்கு, சில மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதிலளித்துள்ளன. அந்த தகவல்கள் அடிப்படையில் பார்த்தால், அந்த மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடால் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
4.70 கோடி வழக்குகள் நிலுவை
லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ”நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில், இன்னும், 4.70 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் உச்ச நீதிமன்றத்தில் மட்டும், 70 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன,” என்றார்.
Advertisement