காஷ்மீர் பண்டிட்கள் குறித்து வெளியாகி உள்ள ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் இடையே விவாத பொருளாகி உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி மற்றும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆகியோருடன் சேர்ந்து போபாலில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த பண்டிட் குடும்பங்களின் வலி மற்றும் துன்பங்கள் இந்த திரைப்படத்தின் மூலம் உலகம் அறிந்து கொண்டது என தெரிவித்தார்.
காஷ்மீர் இனப்படுகொலை குறித்த அருங்காட்சியகத்தை மத்தியப் பிரதேசத்தில் அமைக்க வேண்டும் என்று விவேக் அக்னிஹோத்ரி பரிந்துரைத்துள்ளதாகவும், இதற்கு தேவையான நிலம் மற்றும் தேவையான உதவிகளை மத்திய பிரதேச அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், காஷ்மீர் இனப்படுகொலை அருங்காட்சியகத்தை, மத்திய பிரதேசத்தில் அமைப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான திக்விஜய்சிங், எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
போபாலில் இனப்படுகொலை அருங்காட்சியகம் அமைப்பதற்கு நான் முற்றிலும் எதிரானவன், போபாலின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க விடமாட்டேன். நான் அதை எதிர்க்கிறேன் என்று தமது டுவிட்டர் பக்கத்தில் திக்விஜய்சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…
துண்டிக்கப்பட்ட சிறுமி தலையுடன் கிராமத்தை சுற்றி வந்த வாலிபர் கைது