மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள், ராமநாதபுரம் கல்லூரியில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக, மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிரதம மந்திரி ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், ஜப்பான் நாட்டில் இருந்து பண உதவி கிடைப்பதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மருத்துவனை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டநிலையில், தற்போது கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு இந்தப் பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, 150 மாணவர்கள் சேர்க்கை இருக்கும் ராமநாதபுர கல்லூரியில் 50 இடம் எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும், தமிழக அரசு சார்பாக இந்த கல்வி ஆண்டில் இச்சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறோம் என்றும் சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில தேர்வான மாணவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறவுள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து கல்வி பயில தயாராக வரவேண்டும் என்றும் எய்ம்ஸ் நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்கள் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM