ஆன்மீக பாதையில் சரண்யா துராடி

சின்னத்திரையில் சீரியல்கள் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் சரண்யா துராடி. ஆரம்பத்தில், செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த சரண்யா துராடி, அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள் உள்பட பல தொடர்களில் நடித்து புகழ்பெற்றார்.

நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று பிகினி உடையில் போஸ் கொடுத்து வரும் சூழ்நிலையில் காசிக்கு புனித பயணம் சென்று வந்திருக்கிறார் சரண்யா துராடி. அந்த படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது: வயதான பிறகு தான் காசிக்கு செல்ல வேண்டும் என பலரும் கூறுகிறார்கள். ஆனால், ஏதோ ஒரு தீவில் கவர்ச்சியான விடுமுறையை கழிப்பதற்கு பதிலாக, கங்கை நதியில் கழிக்க நினைத்தேன்.

காசி படித்துறையில் இறங்கி காலாற நடந்தால்.. ஒரு பக்கம் 24 மணி நேரமும் எரியும் பிணங்கள். அப்படியே திரும்பினால் கலர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகில் உற்சாகமாக 'சிவ சம்போ' கோஷம் போடுற யாத்ரீகர்கள். சுற்றி இருக்கும் எதை பற்றியும் அக்கறை இல்லாமல், இன்னொரு உலகில் வாழும் தேசாந்திரிகள். அசுத்தமாக இருந்தாலும் புண்ணியம் என்று கங்கை நதி நீரை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஊருக்கு பார்சல் கட்டும் சுற்றுலா பயணிகள்.

கங்கை ஆரத்தி நடந்த போது அங்கே படகுகளிலும் படித்துறையிலும் அமர்ந்து தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே குரலாக முழங்கிய போது ஒரு எனர்ஜி இருந்ததை மறுக்க முடியாது. எதையாவது பிடித்து கொண்டு இந்த பிறவியை கடந்திட மாட்டோமா என்ற தவிப்பு தான் பக்தியாக வெளிப்படுகிறது. எதை நம்புகிறோம் என்பது ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடுகிறது. ஆனால் நம்பிக்கை என்னவோ ஒன்றுதான். என்று பதிவிட்டிருக்கிறார். இளம் நடிகையான சரண்யாவின் இந்த ஆன்மீக பதிவு பலரையும் கவர்ந்துள்ளது. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.