
நடிகையாக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவரே: கங்கணாவுக்கு கோர்ட் கண்டிப்பு
நடிகை கங்கணா ரணவத் மீது பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தன்னை அவதூறாக பேசியதற்காக அவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். வழக்கு மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கங்ணாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை கடைசியாக இனி ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. அப்படி இருந்தும் ஆஜராகாத கங்கனா ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் “பிரபல நடிகையான நான் தொழில்ரீதியாக பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால், இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து இதுகுறித்து கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவர் நிரந்தரமாக ஆஜராவதில் இருந்து விலக்கு கோர உரிமை இல்லை. அவரது ஜாமின் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சட்ட விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படி பின்பற்ற வேண்டும். இன்றுவரை குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. நடிகை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்கும் நோக்கமின்றி செயல்படுகிறார்.
அவர் பிரபலமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு தொழில்ரீதியாக பல்வேறு திட்டங்கள் இருக்கலாம். ஆனால், அவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த வழக்கு விசாரணை சிறப்பாக நடைபெற அவரது ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இவ்வாறு நீதிமன்றம் கங்கணாவை கண்டித்துள்ளது.