இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கடந்த 2011ம் ஆண்டு போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியினருக்கும், காங்கிர கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அப்பகுதி வழியாக சென்றபோது, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவைச் சேர்ந்த காபியா என்பவர் பலத்த காயமடைந்தார்.
இந்த மோதல் தொடர்பாக திக்விஜய் சிங், உஜ்ஜைன் எம்.பி. பிரேமசந்த் குட்டு உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, திக்விஜய் சிங், பிரேமசந்த் குட்டு உள்ளிட்ட 6 பேருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. போதிய சாட்சிகள் இல்லாததால் 3 பேர் விடுவிக்கப்பட்டனர். தண்டனை பெற்ற 6 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் ரொக்க ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக திக்விஜய் சிங் தெரிவித்தார். ‘அசல் எப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டவராக என் பெயர் குறிப்பிடப்படவில்லை. பின்னர் அரசியல் அழுத்தத்தின் பேரில் எனது பெயரை குற்றவாளிகள் பட்டியலில் போலீசார் சேர்த்தனர்’ என்றார் திக்விஜய் சிங்.
‘காபியாவை தாக்குவதற்கு மற்றவர்களைத் தூண்டியதாக திக்விஜய் சிங், பிரேமசந்த் குட்டு ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை ஆவணங்களில் காபியாவின் வலது கையில் காயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது’ என திக்விஜய் சிங், பிரேமசந்த் குட்டுவின் வழக்கறிஞர் கூறினார்.