உக்ரைன்-ரஷியா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

ரோம்,
உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் இரு தரப்புக்கும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். 

போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், ரஷியா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. 
இதனிடையே உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரஷியா- உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வந்து சமாதானம் நிலவுவதற்காக போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் இந்த சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பி‌ஷப்கள், பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் என 3,500 பேர் கலந்து கொண்டனர். பிரார்த்தனையின்போது பேசிய போப் பிரான்சிஸ், கடந்த நூற்றாண்டில் நடந்த 2 உலகப் போர்கள் தந்த கசப்பான அனுபவங்களை மனித குலம் மறந்துவிட்டதாக கூறினார்.
இந்த சிறப்பு பிரார்த்தனை 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. அதேபோல் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் உள்ளூர் மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வாடிகனில் நடந்த பிரார்த்தனையில் ரஷியா மற்றும் உக்ரைன் தூதர்கள் பங்கேற்றனர். ஆனால் அவர்கள் அரங்கத்தில் எதிரெதிரே அமர்ந்து இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.