புதுடெல்லி: கிறிஸ்தவ அமைப்புகளின் செயல்பாடுகள், வருமானத்தை கண்காணிக்க வாரியம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். ‘இந்துக்களை சில கிறிஸ்தவ அமைப்புகள் வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்துக்கு மதமாற்றம் செய்து வருகின்றன. எனவே கிறிஸ்தவ அமைப்புகள், அவற்றின் சொத்துகள், வருமானம், செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் தனியாக கண்காணிப்பு வாரியம் அமைக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.
அந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளதாகவும், அதன்படிநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்கை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், ‘இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை, ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க வாரியம் அமைத்து, அவற்றை மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏ.எஸ்.போபண்ணா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள்,‘‘இது பொதுநல நோக்குடன் தொடரப்பட்டதாக தெரியவில்லை. விளம்பர நோக்கில் தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு ஏற்றால் மத நல்லிணக்கம்சீர்குலைந்துவிடும். எனவே, அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போகிறோம்’’ என்று எச்சரித்தனர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.