தெலுங்கில் அதிகமாகும் பான்-இந்தியா ஹீரோக்கள்
'பான்-இந்தியா' என்ற பரபரப்பு 'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பிரபலமானது. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த பிரபாஸ் அதன் மூலம் பான்–இந்தியா ஹீரோவானார். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ' ஹிந்தியில் மட்டுமே ஓடியது. சமீபத்தில் வெளிவந்த 'ராதேஷ்யாம்' நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும் அடுத்தடுத்து நான்கைந்து பான்–இந்தியா படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
தெலுங்கில் தயாராகி கடந்த வருடம் டிசம்பரில் வெளிவந்த 'புஷ்பா' படமும் பான்–இந்தியா படமாக வெளியாகியது. எதிர்பார்ப்பையும் மீறி அப்படம் ஹிந்தியிலும் மற்ற மொழிகளிலும் நல்ல வசூலைப் பெற்றது. அப்படத்தின் மூலம் நாயகனாக நடித்த அல்லு அர்ஜுன் பான்–இந்தியா ஹீரோவானார்.
இப்போது அந்த வரிசையில் இன்னும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் நேற்று வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டது. அப்படத்தில் நடித்த ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவருமே இப்போது பான்–ஹீரோக்கள் ஆகிவிட்டனர்.
பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த பான்–இந்தியா ஹீரோ வரிசையில் காத்திருப்பவர் விஜய் தேவரகொன்டா. அவர் நடித்து வரும் 'லிகர்' படம் பான்–இந்தியா படமாக வெளிவர உள்ளது. அதற்குள் தெலுங்கில் வேறு யாராவது பான்–இந்தியா ஹீரோவாக மாறுவார்களா என்பது தெரியவில்லை.
இருப்பினும் ஏப்ரல் 13 அன்று வெளியாக உள்ள 'பீஸ்ட்' படம் பான்–இந்தியா படமாக வெளிவருவதால் விஜய், பான்–இந்தியா ஹீரேவாக உயர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏப்ரல் 14ல் வெளியாக உள்ள கன்னடப் படமான 'கேஜிஎப் 2' மூலம் தன்னுடைய பான்–இந்தியா அந்தஸ்தை யாஷ் இன்னும் உயர்த்திக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.