”ஆயிரம் நபர்களைக் கூட்டி போராடினால் பாஜக எதிர்கட்சியாக ஆகிவிட முடியாது”: கே.எஸ் அழகிரி

”ஆயிரம் நபர்களை அழைத்து வந்து போராட்டம் நடத்தினால் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக பாஜக ஆகிவிட முடியாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகரி கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அகில இந்திய அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் கௌரவ் கோகாய், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகரி,

”டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை மார்ச் 31 வரை நடைபெறுகின்றது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் உறுப்பினர் சேர்க்கை பணியை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்பு, இப்போது மீண்டும் அந்த பணிகளை வேகமாக தொடங்கியுள்ளோம். கடந்த ஒரு வாரமாக உறுப்பினர் சேர்க்கை பணி என்பது வேகமாக நடைபெற்று வருகிறது. அதுகுறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும்.சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. விமர்சனம் என்பது வேறு. ஆக்கபூர்வமாக செயல்படுவது என்பது வேறு. பாஜக தலைவர் அண்ணாமலை அக்கப்போர் செய்து கொண்டு இருக்கின்றார்.

image

மத்தியில் ஆளக்கூடிய, அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஒரு முதல்வரைப் பற்றி தவறான கருத்தைத் தெரிவித்துள்ளார் . ‘முதல்வர் 5000 கோடி எடுத்துக் கொண்டு துபாய் சென்றுள்ளார்’ என்று சொல்லியிருக்கின்றார். அப்படியானால், அதற்கு மத்திய அரசு எப்படி அனுமதித்தது? உளவுத்துறை எப்படி அனுமதித்தது? விமானத்தில் எவ்வாறு அவ்வளவு தொகை கொண்டு செல்ல முடியும். ஒரு குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்றால், அதில் குறைந்தபட்சம் உண்மையாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் அரங்கு திறப்பதற்காக முதலமைச்சர் சென்றுள்ளார். வெளிநாட்டு மூலதனத்தை வெளிநாட்டு தொழில் நுட்பத்தையும் பெறுவதற்காக சென்று இருக்கின்றார்.அதைப் பாராட்ட வேண்டும் இல்லை என்றால் எந்தெந்த வகையில் வெளிநாட்டு மூலதனத்தை பெற முடியும் என்ற ஆலோசனையும் வழங்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல் 5000 கோடி எடுத்துச் சென்றுள்ளார் என்று சொன்னால், அதற்கு அவர் நீதிமன்றத்தின் மூலமாக பதில் சொல்ல வேண்டும். பாஜக தலைவர் கூறும் கருத்துக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது.

ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் நபர்களை கொண்டு வந்தால் அவர்கள் எதிர்க்கட்சி ஆகிவிட முடியுமா?. எங்களது கட்சியின் சாதாரண தொகுதி தலைவர் கூட 5 ஆயிரம் நபர்களை திரட்டுவார். அதுவே, ஆயிரம் நபர்களை கூட்டுவதெல்லாம் எதிர்க்கட்சிக்கு தகுதி ஆகிவிட முடியாது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.