புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து வரும் 31ம் தேதி முதல் 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து இக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டி வருமாறு: உபி உள்பட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடந்ததால் வாக்குகளை பெற 137 நாட்களுக்கு பெட்ரோல், டீசல், காஸ் விலைகளை ஒன்றிய அரசு உயர்த்தாமல் வைத்திருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரத்தில் இவற்றின் விலைகள் 4 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. காஸ் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கஜானாவை நிரப்புவதற்காக ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து வரும் 31ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை, காங்கிரஸ் 3 கட்ட போராட்டங்கள் நடத்தும். முதல் கட்டமாக வரும் 31ம் தேதி காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியேயும், பொது இடங்களிலும் போராட்டம் நடத்துவார்கள். இதில் காஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும், டிரம்ஸ், மணி உள்ளிட்ட இசை கருவிகளை அடித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். ஏப்ரல் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மாவட்ட தலைநகரங்களிலும், 7ம் தேதி அனைத்து மாநில தலைநகரங்களிலும் தர்ணா, பேரணி நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கொள்ளை அடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வௌியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ராஜா அரண்மனைக்கு தயாராகிறார். ஆனால் பொதுமக்கள் பணவீக்கத்தால் அவதியுறுகின்றனர். வெட்கமற்ற முறையில் பொதுமக்களை கொள்ளையடிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.