பெங்களூரு, : ”பஞ்சமசாலி சமுதாயத்துக்கு, இட ஒதுக்கீடு வலியுறுத்தி, மாநில அரசுக்கு அளித்திருந்த காலக்கெடு, வரும் 31ல் முடிவடைகிறது. ”அதற்குள் ஆணையத்திடம் அறிக்கை பெற்று முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஏப்ரல் 14 க்கு பின், மற்றொரு போராட்டம் நடத்துவோம்,” என பசவ ஜெயமிருதுஞ்செயா சுவாமிகள் எச்சரித்தார்.
பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:முந்தைய டிசம்பரில், முதல்வர் பசவராஜ் பொம்மை, பஞ்சமசாலி சமுதாயத்துக்கு, இட ஒதுக்கீடு அறிவிப்பதாக நம்பிக்கையளித்தார். காலக்கெடு முடிந்தும் இதுபற்றி பேசவில்லை. முன்னாள் முதல்வர் எடியூரப்பா போன்று, நம்பிக்கையளித்து கைவிடமாட்டார் என நம்புகிறோம்.பத்து ஆண்டுகளாக, எங்கள் சமுதாயம் எடியூரப்பாவை நம்பியிருந்தது. ஆனால் ஒதுக்கீடு நம்பிக்கையை நிறைவேற்றவில்லை.
தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை, நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.நான் முதல்வரின் வீட்டுக்கு சென்று, 24 மணி நேரம் காத்திருக்கும் சுவாமிகள் அல்ல. அழைத்த இடத்துக்கு வருபவனும் அல்ல. மற்ற சுவாமிகளை போன்று, நிதியுதவிக்காக அவர் வீட்டுக்கு செல்லவில்லை. பஞ்சமசாலி சமுதாயத்துக்கு, இட ஒதுக்கீடு தாருங்கள் என கேட்கிறோம்.மாநில அரசுக்கு அளித்திருந்த காலக்கெடு வரும் 31ல் முடிவடைகிறது. அதற்குள் ஆணையத்திடம் அறிக்கை பெற்று முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஏப்ரல் 14 க்கு பின் மற்றொரு போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement