புதுடெல்லி: தேசியக் கல்விக் கொள்கையின்படி, மாணவர்களுக்கு தரமான கல்வியுடன், ஆயுதப் படையில் சேர்வதற்கான பயிற்சி வழங்கும் வகையில் நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் உருவான இத்திட்டத்தில் முதல்கட்டமாக 21 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தனியார் துறையுடன் இணைந்து 21 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பள்ளிகள் வழக்கமான பள்ளிகளாகவும், 14 பள்ளிகள் உண்டு-உறைவிட பள்ளிகளாகவும் இருக்கும். புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 6ம் வகுப்பு முதல் இருக்கும்’ என கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுடன் இணைந்து சைனிக் பள்ளி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.