கோவை: வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர், துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்த மறைமுகத் தேர்தலின்போது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகள் உள்ளன. சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 31 பேரூராட்சிகளை கைப்பற்றியது. மோப்பிரிபாளையம் பேரூராட்சியை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். மீதம் உள்ள வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக அதிக இடங்களை வென்றது. அதாவது வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 8 வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. 6 வார்டுகளை திமுக கைப்பற்றியது. மீதம் உள்ள ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் வென்றார்.
கடந்த 4-ம் தேதி வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தபோது திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி , தேர்தல் நடத்தும் அலுவலராக கமலக்கண்ணன் நியமிக்கப்பட்டார். தேர்தல் மேற்பார்வையாளராக வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ நியமிக்கப்பட்டார். தொடர்ந்து வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் இன்று (26-ம் தேதி) நடந்தது.
இதையடுத்து, துணை ஆணையர் உமா தலைமையில் அங்கு போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். பேரூராட்சி அலுவலகத்துக்குள் கவுன்சிலர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அப்போது பேரூராட்சி அலுவலகம் அருகே திமுக மற்றும் அதிமுகவினர் திரண்டு இருந்தனர். இதில் திமுகவினர் தடையை மீறி உள்ளே நுழைய முயன்றதாக தெரிகிறது. மேலும், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், சட்டம் – ஒழுங்கு பாதிப்பை தடுக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திமுக பெண் கவுன்சிலரின் கணவருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. அதிமுகவினர் தாக்கியதால்தான் தலையில் காயம் ஏற்பட்டது என திமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது. அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.