லீவ்-உக்ரைனின் வடக்கில் உள்ள செர்னிஹிவ் நகரை சுற்றி வளைத்து, ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கும் மேல் நடந்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் வடக்கில் அமைந்துள்ள செர்னிஹிவ் நகர் மீதான தாக்குதலை ரஷ்ய படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். நகரை சுற்றி வளைத்து, ஏவுகணைகளை வீசி வான்வழித் தாக்குதல் நடத்துகின்றனர்
.இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஏராளமான மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நகர் முழுவதும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு லீவ் நகரிலும் ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.இதில், பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப் படுகிறது.
ராணுவ அமைச்சருக்கு மாரடைப்பு
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்குவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் அமைச்சர் ஆன்டன் கெராஷென்கோ தெரிவித்துள்ளார். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, அவர் சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, செர்ஜி மீது புடின் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கெராஷென்கோ தெரிவித்துள்ளார்.
Advertisement