புதுடெல்லி: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கி உள்ள நிலையில், வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு விரைவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை எடுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அதே சமயம், முன்கள, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு 3வதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச விமான சேவை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. ஏர் பபிள் திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமான சேவை நடந்து வந்தது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் இன்று முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. பல நாடுகளும் இந்தியாவுக்கு வழக்கமான விமானங்களை இயக்கத் தொடங்கி உள்ளன.இதனால், இனி ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ள நிலையில், பல நாடுகள் கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி, 3 டோஸ் தடுப்பூசியை கட்டாயம் போட்டிருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றன. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, அலுவலக அல்லது வர்த்தகம் சார்ந்த மற்றும் வெளிநாட்டு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும் விமான பயணிகளுக்கு விரைவில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை எடுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.வெளிநாடு செல்பவர்கள் தனியார் கிளினிக்குகளில் பணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. * ஒரே நாளில் 4100 பேர் பலிகொரோனா தினசரி பாதிப்பு மற்றும் பலி குறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:* நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிததாக 1660 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த தொற்று எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 18ஆயிரத்து 32 ஆகும்.* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,741 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 702 நாட்களில் மிகவும் குறைவாகும்.* கொரோனா தொற்றால் 4,100 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் விடுபட்ட 4,007 இறப்புக்கள் மற்றும் கேரளாவில் விடுபட்ட 87 இறப்புக்கள் நேற்றைய கொரோனா இறப்புகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. * நாடு முழுவதும் 182.87 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* சான்றிதழில் மீண்டும் பிரதமர் மோடி படம்உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் மணிப்பூரில் கடந்த ஜனவரி 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் மீண்டும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோ-வின் இணையத்தளத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.