2 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து வெளிநாட்டு விமானங்கள் சேவையை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது இந்தியா.!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து வெளிநாட்டு விமானங்கள் சேவையை இந்தியா இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. 40 நாடுகளில் இருந்து 66 பன்னாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள் இந்தியாவிற்கு வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் விமானப் போக்குவரத்துத் துறை, சுற்றுலாத் துறை போன்றவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

எட்டு மாதங்கள் வரையில் நீடித்த பொதுமுடக்கத்தைத் தொடர்ந்தது, பின்னர் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது.

2021-ம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையைத் தொடங்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து இன்று முதல் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த 66 விமான நிறுவனங்களின் விமானங்கள் வாரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தடவை வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் வரத் தொடங்கியுள்ளன.

ஏப்ரல் முதல் வாரத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் இந்தியாவில் இருந்து 27 வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களும் சென்று வர உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.