வேலூரில் பேட்டரியில் இயங்கும் எலக்ட் ரிக் பைக் உள்ளிட்ட 2 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் தந்தை, மகள் இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
வேலூர் சின்ன அல்லாபுரம் பலராம முதலி தெருவைச் சேர்ந்தவர் துரைவர்மா (49). டோல்கேட் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்துள்ளார். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு மோகன பிரீத்தி(13), அவினாஷ் (10) என்ற பிள்ளைகள். இந்திரா சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். பிள்ளைகள் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள பாட்டி வீட்டில் இருந்தபடி படித்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் வேலூர் வந்து செல்கின்றனர்.
துரைவர்மா சில நாட்களுக்கு முன்பு புதிதாக பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்கை வாங்கியுள்ளார். இந்த வாகனத்தை நேற்று முன்தினம் இரவு சிறிய வீட்டின் முன்பகுதியில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்து மின்சாரத்தில் சார்ஜ் ஏற்றியுள்ளார். அதன் அருகில் பெட்ரோல் வாகனத்தையும் நிறுத்தியிருந்தார். சிறிய வீட்டின் அறையில் தந்தையும், மகளும் படுத்துறங்க, மகன் அவினாஷ் மட்டும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் வீட்டில் உறங்கச் சென்றார்.
அதிகாலை 2 மணியளவில் எலக்ட்ரிக் பைக்கில் இருந்து திடீரென தீ எரிய ஆரம்பித்து அருகில் இருந்த பெட்ரோல் வாகனமும் மள மளவென எரிய தொடங்கியது. சிறிய வீட்டின் வாசல் பகுதியில் அந்த இரு சக்கர வாகனம் எரிந்ததால் இருவரும் கதவை திறந்துகொண்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. தீ எரிவதைப் பார்த்த சிலர் தீயணைப்பு நிலையத்துக்கும், பாகாயம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் எரிந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப் படுத்தினர்.
பின்னர், தீயில் சேதமடைந்த கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தந்தையும், மகளும் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்தனர். இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட் டது தெரியவந்தது. இதுகுறித்து, பாகாயம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார். தீ விபத்தில் ஏற்பட்ட புகையால் தந்தையும், மகளும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக போலீஸார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
புகையால் மூச்சுத்திணறல்
இந்த விபத்து குறித்து வேலூர் மாவட்ட முன்னாள் தடய அறிவியல் நிபுணர் பாரியிடம் கேட்டதற்கு, ‘‘பேட்டரி வாகனத்துக்கு சார்ஜ் ஏற்றும்போது மின் கசிவு ஏற்பட்டு எரிய ஆரம்பித்திருக்கலாம். அருகில், பெட்ரோல் வாகனமும் இருந்ததால் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கும். காற்றோட்டம் இல்லாத சிறிய வீட்டினுள் புகை சூழ்ந்ததால் அதிலிருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவை இருவரும் அதிகம் சுவாசித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக் கலாம்’’ என்றார்.
பாதுகாப்பான சார்ஜிங் முறை
பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்களில் பாதுகாப்பான சார்ஜிங் முறை குறித்து தனியார் பேட்டரி இரு சக்கர வாகன ஷோரூம் நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஒவ்வொரு வாகனமும் அதிகபட்சம் 5 மணி நேரம் சார்ஜ் செய்யும் வகையில் இருக்கும். குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் சார்ஜ் செய்வதை நிறுத்திவிடுவது நல்லது. 100 சதவீதம் சார்ஜ் முடிந்ததும் தானாக ஆப் ஆகும் வகையில் இருக்கும் தொழில்நுட்பம் கொண்ட வாகனம் வாங்குவது சிறந்தது. பொதுவாக பேட்டரி வெடிக்க வாய்ப்பில்லை. மின் கசிவு கோளாறால் இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம்’’ என தெரிவித்தனர்.