புதுடெல்லி: கடந்த 70 ஆண்டுகளில் நாடு முழுவதும் விவசாய நிலங்களில் கார்பன் அளவு ஒரு சதவீதத்தில் இருந்து 0.3 சதவீதமாக சரிந்து குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் தேசிய மானாவாரி (விவசாயத்துக்கு மழையை நம்பி இருப்பது) விளைநிலப் பகுதி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசோக் தல்வாய் அளித்த பேட்டியில் கூறியதாவது: மண்ணில் உள்ள கார்பன் அளவுதான் அதன் இயற்கை வளத்தில் முக்கிய அம்சமாகும். இதுதான் மண்ணுக்கு நீரை தேக்கி வைக்கும் திறன், கட்டமைப்பு மற்றும் வளத்தை தருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் உள்ள விவசாய நிலங்களில் மண்ணின் கார்பன் அளவு, ஒரு சதவீதத்தில் இருந்து படிப்படியாக சரிந்து 0.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது மண்ணின் உற்பத்தி திறனை பாதிக்கும். கார்பன் குறைவதால் மண்ணில் நுண்ணியிரிகள் உயிர் வாழ முடியாது. நுண்ணியிரிகள் தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கான முக்கிய காரணியாகும். மண்ணுக்கு சரியான இயற்கை உரம் வழங்காமல், பயிர்களை தீவிரமாக பயிரிடுவதே கார்பன் அளவு வீழ்ச்சிக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.* ஆண்டு முழுவதும் உதவும் சர்க்கரை வள்ளி கிழங்குதலைமை நிர்வாக அதிகாரி அசோக் தல்வாய் மேலும் கூறுகையில், ‘‘சர்க்கரை உற்பத்திக்காக கரும்புகளை மட்டும் நம்பி இருக்காமல் சர்க்கரை வள்ளி கிழங்கை அறிமுகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. சர்க்கரை ஆலைகளுக்கு வெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே கரும்பு கிடைக்கிறது. இதுவே சர்க்கரை வள்ளிக் கிழங்கை மாற்றாக அறிமுகப்படுத்தினால் ஆண்டு முழுவதும் சர்க்கரை உற்பத்தி பாதிக்காமல் இருக்கும்’’ என்றார்.