புதுச்சேரி யூனியன் பிரதேசம் செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள சாராயக்கடை உரிமையாளர் ஒருவர், தமிழகத்தில் இருந்து வரும் குடிமகன்களின் வசதிக்காக, சங்கராபரணி ஆற்றைக் கடப்பதற்கு வசதியாக பிரத்யேகமாக மிதவைப் படகு விட்டதைக் கண்டறிந்த போலீசார் , அந்த மிதவைப் படகை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி தமிழக எல்லையையொட்டி உள்ளது செட்டிப்பட்டு கிராமம். இங்குள்ள சங்கராபரணி ஆற்றின் கரையோரம் மதுக்கடை ஒன்று அமைந்துள்ளது. புதுச்சேரியில் சாராயம் மற்றும் மதுபான விலை குறைவு என்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளான திருவக்கரை, எறையூர், நெமிலி, செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அதிக எண்ணிக்கையில் மது குடிப்போர், சங்கராபரணி ஆற்றைக் கடந்து, செட்டிப்பட்டு மதுக்கடை மற்றும் சாராயக்கடைக்கு வந்து, குடித்து விட்டு செல்வது வழக்கம்.
தற்போது சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் தமிழகப் பகுதியை சேர்ந்த மதுகுடிப்போர் சங்கராபரணி ஆற்றைக் கடந்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், விற்பனை பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, மதுக்கடை உரிமையாளர் தனது சொந்த செலவில் மிதவை படகு ஒன்றை அமைத்துள்ளார்.
சங்கரா பரணி ஆற்றின் குறுக்கே 50 மீட்டர் தொலைவுக்கு கரைகளின் இருபுறம் கயிறு கட்டி, அதன் மூலம் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த மதுக்குடிப்போரை செட்டிப்பட்டு மதுக்கடைக்கு மிதவையில் அழைத்து வருகின்றார். அவர்கள் மது குடித்த பின், அதே மிதவையில் திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.
மேலும் சாராயம் குடிப்போர் மிதவையில் அமர்ந்தபடியும் குடித்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கலால்துறையினர் மது அருந்திவிட்டு செல்வோர் ஆற்றில் விழுந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை அறிந்து, அங்கு சென்று பார்வையிட்டு உரிமையாளரை கண்டித்தனர். மேலும் மிதவையை அகற்றவும் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் அகற்றி விட்டனர். மேலும் இதுபோல் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக அந்த மிதவை படகையும், சாராயக் கடையில் இருந்த பொருட்களையும் கைப்பற்றிய புதுச்சேர் போலீசார் இனி வரும் காலங்களில் இப்படி விபரீத் செயலில் ஈடுபட்டால் மதுக்கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர்