15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று (26) இந்தியாவில் ஆரம்பமானது.
தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (26) நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டு இழப்புக்கு 131 ஓட்டங்களை எடுத்தது. எம்.எஸ்.டோனி 50 ஓட்டங்களையும் ,உத்தப்பா 28 ஓட்டங்களையும், ஜடேஜா 26 ஓட்டங்களையும் எடுத்தனர். டோனி 38 பந்துகளில் அரை சதத்தை பதிவுசெய்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
கொல்கத்தா சார்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இதையடுத்து, 132 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.. அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். . அஜிங்கியா ரகானே 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இறங்கிய அணித்தலைவர் ஷ்ரேயஸ் அய்யர் மற்றும் சாம் பில்லிங்ஸ் பொறுப்புடன் ஆடினர். சாம் பில்லிங்ஸ் 25 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை கொல்கத்தா அணி பதிவுசெய்தது.