நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பள்ளி வகுப்பறையில் சக மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த 11 ஆம் வகுப்பு மாணவனை கண்டித்த ஆசிரியை ஒருவர், அவனிடம் மன்னிப்பு கடிதம் கேட்டதால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவன் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவத்தால் ஆசிரியைக்கு எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் இரு விதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ரிதுன் என்பவர், பள்ளியின் வகுப்பறையில் வைத்து உடன் படித்த மாணவிக்கு காதல் கொடுத்ததாக கூறப்படுகின்றது.
மாணவன் செய்த தவறுக்காக அவனை கண்டித்த பள்ளி ஆசிரியை மன்னிப்புக் கடிதம் எழுதி வரச்சொல்லி வெளியே அனுப்பி உள்ளார். இதனால் அங்கிருந்து வெளியேறிய மாணவன் அவமானம் தாங்காமல், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில், ஆசிரியை தெய்வாம்பாள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவர் சார்ந்த சாதிக்கட்சியினர் பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு நாட்களாகியும் சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பள்ளியில் ஆசிரியர் தெய்வாம்பாள் மீது எந்த தவறும் இல்லை, மாணவன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், ‘இனிமேல் இதுபோல் தவறுகள் செய்ய மாட்டேன்’ என கடிதம் எழுதிக் கொடுக்க சொன்ன நிலையில், அதை அவமானமாகக் கருதி, மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், பள்ளியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க கூடாது எனக்கூறி, தண்ணீர்பந்தல் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, 30 பெண்கள் உள்பட 150 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் கையெழுத்திட்டு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு கொடுக்கப் போவதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஆசிரியைக்கு எதிராகவும், ஆதரவாகவும் இரு பிரிவாக போராட்டம் நடப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பிப்போய் உள்ளனர்.