Tamil Nadu News Updates: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.104.90-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 53 காசுகள் அதிகரித்து ரூ.95-க்கும் விற்பனையாகிறது.
ரூ2,600 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
துபாயில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். தொழில் நிறுவனங்களுடன் ரூ2,600 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.
இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு
நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
10 நிமிட உணவு டெலிவரி திட்டம் ரத்து
சொமேட்டோ அண்மையில் அறிவித்த 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. புதிய திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், சொமேட்டோ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
புதினை விமர்சித்த பைடன்
போலந்தில் நேட்டோ படைகள், உக்ரைன் மக்களுடன் ஜோ பைடன் சந்திப்பு. அதிபர் புதின் அதிகாரத்தில் நீடிக்க முடியாது என ஜோ பைடன் விமர்சித்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 149 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1,826 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் 2 ஆண்டுகளாக முடங்கியிருந்த பன்னாட்டு விமான சேவை, இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. முக்கிய நிறுவனங்கள் விமான சேவையை தொடராததால், விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மாலத்தீவு பயணத்தின் போது, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துடன் விவாதித்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர்.
இன்று மாலை 3.30க்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் மும்பை – டெல்லி அணிகளும், இரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஓய்.பாடீல் மைதானத்தில் பெங்களூரு-பஞ்சாப் அணிகளும் மோதுகின்றனர்.